சிங்கப்பூரிலிருந்து வெளியேற இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவுக்கு அந்நாடு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் கோட்டபயவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரை நாட்டை வெளியேற்றுமாறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 


இந்நிலையில், அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து இருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு தெரிவித்திருக்கிறது. கோட்டாபய ஒரு போர் குற்றவாளி என்றும், அவரை  சிங்கப்பூர் அரசு நாட்டிற்குள் அனுமதித்தது ஏன் என்றும் போராட்டக்காரர்கள் அந்நாட்டு அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 






அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விசா காலம் நீட்டிக்கப்படாது எனவும் சிங்கப்பூர் அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 15 நாட்களுக்கு மட்டுமே கோட்டபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் மெய்ப்பாது காவலர்கள் நாட்டில் தங்கலாம் என சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்திருந்தது


அந்தப் கால அவகாசம் முடிவடைவதால் சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வரலாறு காணாத விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான உதவிகளை செய்யாததால் அவர்களில் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ராஜபக்ச அரசை கலைக்க வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


மக்கள் புரட்சியின் காரணமாக மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோட்டபயவுக்கு அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பவே மீண்டும் தனி விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். இச்சூழலில், கோட்டபயவிற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் தற்போது எந்த நாட்டுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. 


ஜூலை 13ஆம் தேதி, கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பி சென்றனர். மாலத்தீவுகளுக்கு சென்ற அவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என விமான நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.