ஹஜ் யாத்திரை நெருங்கி வருவதால், யாத்திரையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வணிக மற்றும் குடும்ப வருகை விசாக்களை வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஹஜ் யாத்திரை காலம் முடிவடையும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை விசாக்கள் இடைநிறுத்தம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான பதிவு இல்லாமல் தனிநபர்கள் ஹஜ் செய்ய முயற்சிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டினர் அடிக்கடி உம்ரா அல்லது விசிட் விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் ஹஜ் செய்ய சட்டவிரோதமாக அதிக காலம் தங்கியுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எந்தெந்த நாடுகளுக்கு தடை

அல்ஜீரியா

பங்களாதேஷ்

எகிப்து

எத்தியோப்பியா

இந்தியா

இந்தோனேசியா

ஈராக்

ஜோர்டான்

மொராக்கோ

நைஜீரியா

பாகிஸ்தான்

சூடான்

துனிசியா

ஏமன்

2024ஆம் ஆண்டு நடைபெற்ற சோகம்:

ஹஜ் பயணத்தில் பங்கேற்க சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அதிக நேரம் தங்கியதால் கடந்த ஆண்டு நெரிசல், பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டது. 2024 ஆம் ஆண்டில், அதிக கூட்டம் மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக 1,200 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் புனித யாத்திரையின் போது உயிரிழந்தனர்.

இந்த துயரங்கள் சவுதி அதிகாரிகளை கடுமையான விசா விதிமுறைகளை அமல்படுத்தத் தூண்டியுள்ளன. பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் ஹஜ்ஜில் பங்கேற்பதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளுக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், விசா இடைநிறுத்தம் என்பது பாதுகாப்பான புனித யாத்திரையை உறுதி செய்வதற்கான ஒரு தளவாட நடவடிக்கை என்றும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் உறுதியளித்துள்ளது.

பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் பெரும்பாலும் அடிப்படை வசதிகளை அணுக முடியாமல் தவிப்பதாகவும், இது புனித யாத்திரையின் போது பாதுகாப்பு அபாயங்களுக்கு பங்களிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, உம்ரா விசாக்களை வழங்குவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 13 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முறையான அங்கீகாரம் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் அல்லது விசாக்களுக்கு மேல் தங்கியிருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் நுழைவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.