அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடைகளை விதித்த நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதிலும், இந்தியாவிற்கான ஏற்றுமதி 66 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் விதித் தடையால் பாதித்த ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவ மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தடைகள், இறுதியாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, நவம்பர் 21 முதல் அமலுக்கு வரும் ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீதான அமெரிக்கத் தடைகள் குறித்து இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் எச்சரிக்கையாக இருப்பதால், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 66 சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்தியாவிற்கான ஏற்றுமதி சரிவு
உலகளாவிய பகுப்பாய்வு வழங்குநரான கெப்லரின்(Kpler) தரவுகளின்படி, நவம்ர் 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, இந்தியாவிற்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சராசரியாக நாள் ஒன்றிற்கு 6,72,000 பீப்பாய்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இது, கடந்த அக்டோபரின் 1.88 மில்லியன் பீப்பாய்களாக இருந்ததைவிட தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மற்றொரு தரவின்படி, அனைத்து இடங்களுக்கும் ரஷ்யாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, நவம்பரில் 28 சதவீதம் குறைந்து, 2.78 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது.
மேலும், எண்ணெய் பீப்பாய்கள் ஏற்றப்பட்ட டேங்கர்களில், சுமார் 50 சதவீத டேங்கர்கள் தற்போது குறிப்பிட்ட இலக்குகள் இல்லாமல் பயணிப்பதாக கூறப்படுகிறது. இது, வாங்குபவர்களை பாதுகாப்பதிலும், அனுமதி-இணக்க வழிகளிலும் சிரமங்களை குறிக்கிறது.
மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியும் சரிவு
இந்நிலையில், மற்ற முக்கிய வாடிக்கையாளர்களான சீனா மற்றும் துருக்கிக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளன. குறிப்பாக, சீனாவிற்கு செல்லும் ஏற்றுமதி 47 சதவீதம் குறைந்து, நாள் ஒன்றிற்கு 6,24,000 பீப்பாய்களாகவும், துருக்கிக்கான ஏற்றுமதி 87 சதவீதம் குறைந்து 43,000 பீப்பாய்களாகவும் உள்ளன.
அக்டோபர் மாதத்தில், சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகள் கூட்டாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை பெற்றன. ரஷ்ய ஏற்றுமதிகள் இந்தியாவை அடைய பொதுவாக ஒரு மாதம் ஆகும் என்பதால், நவம்பர் மாத அனுப்புதலில் பெரும்பாலானவை அடுத்த மாதத்தில் தான் இங்கு வந்து சேரும். இது, அமெரிக்க தடைகள் அமலுக்கு வரும் நவம்பர் 21-ஐ தாண்டிதான் வரும்.
ஆர்டர்களை குறைத்த இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள்
இந்நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள ஏற்றுமதிகளை, காலக்கெடுவிற்குள் பூர்த்தி செய்ய விரைவுபடுத்தியுள்ளன. ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அக்டோபர் மாத சராசரியுடன் ஒப்பிடும்போது, நவம்பர் 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 16 சதவீதம் அதிகரித்து, 1.88 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது.
வரும் மாதங்களில், குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க குறைப்பை இந்தியா எதிர்பார்க்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
