உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்திய உருமாற்றக் கொரோனா வைரஸ் கிருமி பாதிப்பு, முதல் முறையாக ரஷ்யாவிலும் பதிவாகியுள்ளது. ஊழியனோவ்ஸ்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் இந்தக் கிருமி தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட 16 மாணவர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கொம்மர்சாண்ட் எனும் உள்ளூர் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாஸ்கோவிலிருந்து 700 கிமீ தொலைவில் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில், மனித நலவாழ்வு மற்றும் நுகர்வோர் உரிமைகளைக் கண்காணிப்பதற்கான அரசு அமைப்பான ரோஸ்போட்ரப்னாட்சர் முறைப்படி இந்தத் தொற்றைப் பதிவுசெய்துள்ளது. இந்த அமைப்பின் அதிகாரி தில்யார் காக்கிமோவ் ஊடகங்களுக்குப் பேசுகையில், ‛தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் முதலில் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர் என்றும், தொடர்ந்து அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்,’ என்றும் கூறினார்.
முன்னதாக, ரஷ்யாவில் உருமாறிய கொரோனா கிருமியின் பாதிப்பு எதுவும் பதிவாகியிருக்கவில்லை என்று துணை பிரதமர் டாடியானா கொலிகோவா கூறியிருந்த நிலையில், இந்திய உருமாற்ற கொரோனா கிருமி கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று, இந்த இந்திய உருமாற்ற கொரோனா கிருமியை உலகளாவிய உருமாற்றக் கிருமி என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இது மிக எளிதாகப் பரவிவருகிறது என பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதால், இவ்வாறு வகைப்படுத்தியதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.1.617 (B.1.617) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா கிருமியானது, இதுவரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதைத் தவிர பிரிட்டன் உருமாறிய கிருமி, தென்னாப்பிரிக்க உருமாறிய கிருமி, பிரேசில் உருமாறிய கிருமி ஆகியன ஏற்கெனவே இதேபோல அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளைநோய் அல்லது பெருந்தொற்றை உண்டாக்கும் கிருமிகள், தடுப்பூசி, மருந்துகள், இயற்கையான எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்து உயிர்வாழ்வதற்காக, இப்படி தம் உருவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்துவரும் இந்த இயற்கையான செயல்பாட்டை யாரும் நிறுத்தமுடியாது. கோரமான கொரோனா கிருமியும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
அது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உருவத்தை மாற்றிக்கொள்வதில் அதிவேகமாக இருப்பதை நுண்ணுயிரியியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடுத்தடுத்த திரிவு வடிவங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சிசெய்து அதை வெளியிட்டுவருகின்றனர். மருத்துவத் துறையினர் அதற்கேற்ப சிகிச்சைமுறையை வகுக்க இது உதவியாக இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
கொரோனா கிருமியின் முதல்கட்டத் திரிபு ‘கவனத்துக்குரிய திரிபு’ (variant of interest) என முதலில் வரையறுத்து, அதை வல்லுநர்கள் கண்காணித்து வருவார்கள். தொடர்ந்து அது உண்டாக்கும் விளைவுகளை வைத்து அடுத்த கட்டமாக, ’உலகளாவிய திரிபாக’ (variant of concern) அறிவிக்கப்படும். மிக எளிதாகப் பரவுவது, மோசமான பாதிப்பை உண்டாக்குவது, எதிர்ப்பு சக்தியாலோ தடுப்பூசி, சிகிச்சையாலோ நோய் மட்டுப்படுத்தப்படுவதைக் குறைப்பது ஆகியவற்றில் ஏதாவது ஒரு அம்சம் இருந்தாலே, ’உலகளாவிய உருமாற்றம்’ என அறிவிக்கப்படும்.