அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசி வாயிலாக பேசிய போதும், புதின் எந்த விதத்திலும் வளைந்துகொடுக்காமல் பேசியதாக தெரிகிறது. மேலும், ட்ரம்ப்புடன் பேசி முடித்த உடனேயே, உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா நடத்தியதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

Continues below advertisement

புதினுடன் பேசியதில் எந்த முன்னேற்றமும் இல்லை - ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று தொலைபேசியில் புதினிடம் நீண்ட நேரம் பேசிய நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், புதினிடம் மிக நீண்ட நேரம் பேசியதாக கூறியுள்ளார். நிறைய விஷயங்கள் குறித்து அவருடன் பேசியதாகவும், அப்போது உக்ரைன் போர் குறித்தும் பேசியதாகவும், அது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். புதினிடம் இன்று பேசியதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Continues below advertisement

ரஷ்யா தரப்பு விளக்கம்

இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், கணிசமான அளவிலும் நடந்ததாகவும், உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதை புதின் மறுத்து விட்டதாகவும், புதினுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, போர் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தை சரி செய்யும் தங்கள் இலக்கை அடையும் வரை, போரிலிருந்து பின்வாங்க மாட்டோம் என புதின் உறுதியாக தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும், ராணுவப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும், இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என புதின் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கம் அமெரிக்கா

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து, முந்தைய ஜோ பைடன் அரசை விமர்சித்திருந்த ட்ரம்ப், அவர் தங்கள் நாட்டின் தேவைக்கே பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நாட்டின் தேவைக்கு வைத்துக்கொண்டு, அதிகப்படியாக உள்ள ஆயுதங்களையே உக்ரைனுக்கு தங்கள் அரசு வழங்குவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களுக்கு உதவ நாங்கள் முயன்று வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.              

உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா

ட்ரம்ப் மற்றும் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது ரஷ்யா. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் மற்றும் புதின் தெலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, நாடு முழுவதும் வான்வழி எச்சரிக்கைகள் ஒலிக்கத் தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரஷ்யா போரை நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிவதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது மிகப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால், அது போரை நிறுத்தாது என்பதற்கான சான்றுதான் இது என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா மீது அமெரிக்கா இன்னமும் அதிக அளவிலான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.