Russia Condemn Trump: “நீங்க இந்தியாவ கட்டாயப்படுத்துறீங்க“; ட்ரம்ப்பை கடுமையாக சாடும் ரஷ்யா; எதற்காக தெரியுமா.?
அமெரிக்கா உடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்தியா ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்காது என்று ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே சமீபத்தில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு பேசிய ட்ரம்ப், ஒப்பந்தத்தின்படி, இந்தியா இனி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காது என்று கூறினார். இதற்கு இந்திய தரப்பில் பதில் ஏதும் வெளியாகாத நிலையில், இந்தியா மற்றும் பிற நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் தடுக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது. “பொருளாதார ஆதிக்கத்தை அடைய", வரிகள், தடைகள் மற்றும் நேரடி தடைகள் போன்ற "கட்டாய" நடவடிக்கைகளை ட்ரம்ப் பயன்படுத்துவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
செர்ஜி லாவ்ரோவ் கூறியது என்ன.?
தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டி அளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கடந்த ஆண்டு ட்ரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையிலான அலாஸ்கா பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் குறித்த அமெரிக்க திட்டத்தை மாஸ்கோ ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட போதிலும், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்ததாகவும், மற்ற நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை தடை செய்ய முயற்சித்ததாகவும் கூறினார்.
மேலும், உக்ரைன் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தங்களிடம் கூறுவதாகவும், அதற்காக அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாவும் கூறிய அவர், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், பரந்த அடிப்படையிலான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை நோக்கி நகர்கிறோம் என்றும் லாவ்ரோவ் கூறியதாக மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதுவரையிலும், உண்மை நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது என்றும், புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், ஐ.நா. கடல் சட்டம் குறித்த மாநாட்டை மீறி திறந்த கடலில் டேங்கர்களுக்கு எதிரான 'போர்' நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எரிசக்தி வழிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், 'பொருளாதார ஆதிக்கத்தை அடைவது' அமெரிக்காவின் நோக்கம் என்று லாவ்ரோவ் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் கட்டாயமானது மற்றும் நியாயமான போட்டியுடன் பொருந்தாதது என்று கூறிய அவர், கட்டணங்களை(வரி) பயன்படுத்துதல், தடைகள், நேரடித் தடைகள் மற்றும் சில நாடுகள் மற்றவர்களுடன் ஈடுபடுவதைத் தடை செய்தல் ஆகியவற்றை குறிப்பிட்டார்.
மேலும், "இந்தியா, சீனா, இந்தோனேசியா மற்றும் பிரேசில் போலவே, அமெரிக்கா போன்ற பெரிய வல்லரசுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க திறந்த நிலையில் இருக்கும்போது, இவை அனைத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்கர்களே வழியில் செயற்கையான தடைகளை உருவாக்கும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்," என்றும் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
“இந்தியா மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதை தடுக்கின்றனர்“
இதனிடையே, அமெரிக்கா, இந்தியாவையும் தங்களது பிற கூட்டாளிகளையும், மலிவு விலையில் ரஷ்ய எரிசக்தி வளங்களை வாங்குவதை தடை செய்ய முயற்சிக்கின்றனர் என்றம், மேலும் அமெரிக்க எல்என்ஜி-யை (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) அதிக விலைக்கு வாங்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் ரஷ்ய அதிபர் புதினின் உதவியாளர் கூறியுள்ளார்.
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பின், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்காது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இருப்பினும், இந்திய தரப்பில் இப்போது என்ன பதில் வரப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.























