இலங்கையின் கெழும்புவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து திரும்பிய 22 புத்தத் துறவிகளிடமிருந்து, 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டிகளில் ரகசிய அறை வைத்து ரூ.110 கோடி போதைப் பொருட்கள் கடத்தல்
உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு இலங்கை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து திரும்பிய இலங்கையைச் சேர்ந்த 22 புத்தத் துறவிகளிடம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அமதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, அவர்கள் ஒவ்வொருவரின் பெட்டியின் அடிப்பகுதியிலும் அமைக்கப்பட்ட ரகசிய அறையிலும், பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்களுக்கு உள்ளேயும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோ எடையுள்ள குஷ் மற்றும் ஹேஷ் வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 110 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பான்சர் மூலம் தாய்லாந்து சென்ற புத்தத் துறவிகள்
ஒவ்வொரு துறவியும் கிட்டத்தட்ட 5 கிலோகிரமுக்கு அதிகமான போதைப்பொருளை பிரித்து எடுத்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, ஏப்ரல் 22-ம் தேதி ஸ்பான்சர் ஒருவரின் மூலம் இவர்கள் பேங்காக் சென்றது தெரியவந்துள்ளது. அதாவது, இவர்களது பயணச் செலவுகளை அந்த ஸ்பான்சரே ஏற்று, இவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
மேலும், அவர்களது செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, வெளிநாடுகளில் இவர்கள் சாதாரண உடை அணிந்திருப்பது போன்ற புகைப்படங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் புத்தத் துறவிகள் என்று கூறப்படும் இந்த 22 சந்தேக நபர்களும், நீதிமன்றத்தில் ஆஜர்பட்டுத்தப்பட்டனர். இவர்கள் உண்மையான புத்தத் துறவிகள் தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதிலேயே, இதுதான் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் என்றும், போதைப் பொருளுடன் துறவிகள் கைது செய்யப்பட்டு பதிவான முதல் வழக்கு ஈதுதான் எனவும் கூறப்படுகிறது.
