அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓட்டெடுப்பால் 1973-ல் இருந்து அமெரிக்காவில் கருகலைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பாதுகாப்பானது நீக்கப்பட்டுள்ளது. 1970-ல் கருக்கலைப்பிற்காக தொடரப்பட்ட ஒரு வழக்குதான் Roe Vs Wade வழக்கு. அவ்வழக்கின் தற்போதைய தீர்ப்பால் 1973-ல் இருந்து நடைமுறையில் இருந்து வந்த கருக்கலைப்பிற்கான சட்டப்பாதுகாப்பானது முடிவுக்கு வந்துள்ளது. அதுவே அமெரிக்கர்களின் கொந்தளிப்புக்குக் காரணம்.  



உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானவர்கள்


ரோ Vs வேட் (ROE Vs WADE)


1970-ம் ஆண்டில் தனது கருவினை கலைக்க உரிமைகோரி தொடரப்பட்ட வழக்கில் ரோ என்பவர், (வழக்கு தொடர்ந்தவரின் தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டு வழக்கு தொடுத்தவரின் உண்மையான பெயருக்கு பதிலாக ஜேன் ரோ (Jane Roe) என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது) அப்போதைய டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் மாவட்ட வழக்கறிஞரான ஹென்றி வேட் (Henry wade) என்பவரை எதிர்த்து தனக்கு அரசமைப்பு வழங்கியுள்ள தனிப்பட்ட தனியுரிமையை பறிப்பதாக கருக்கலைப்பிற்கான தடை உள்ளதாக வழக்கு தொடர்ந்தார். அதன் மூலம், இந்த பாதுகாப்புச் சட்டமானது வழக்கில் சம்மந்தப்பட்டவர்களின்  பெயராலேயே ரோ Vs வேட் என அழைக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில் 1973-ல் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஏழு நீதிபதிகள் ரோ-விற்கு ஆதரவாகவும் கருக்கலைப்பினை செய்ய சம்மந்தப்பட்ட பெண்களுக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பினை வழங்கி கருக்கலைப்பினை சட்டப்பூர்வமானதாக ஆக்கினர்.


ரோ Vs வேட் சட்டம் நீக்கம்


மிசிசிப்பி மாகாணத்தில் 15 வாரங்களுக்கு பிறகான கருவை கலைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரோ Vs வேட் சட்டம் வழங்கி வந்த சட்டப் பாதுகாப்பினை நீக்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றத்தின் தற்போதை பழமைவாத அமர்வு. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய அமர்விற்காக கடந்த டோனல்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் சில நீதிபதிகளை நியமித்த போதே பலத்த எதிப்புகள் கிளம்பின. நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பழமைவாத சித்தாந்தங்களை அமெரிக்கா முழுவதிலுமாக மீண்டும் நிர்மாணிக்கும் முயற்சி என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில்-தான் அவ்வாறாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் மூலமாக கருக்கலைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த முழுமையான சட்டப்பாதுகாப்பு நீங்கியுள்ளது.



உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஆதரிப்போர்


கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் வலுக்கும் ஆதரவு


பெண்களுக்கு ஆதரவான அமைப்புகள் மற்றும் கருக்கலைப்பினை ஆதரிப்போர், அரசியலமைப்பு பெண்களுக்கு வழங்கி வந்த தனியுரிமையினை உச்சநீதிமன்றம் நீக்கி தவறிழைத்திருப்பதாக சொல்லி சட்ட நீக்கத்திற்கு எதிராக அமெரிக்கா முழுமைக்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேவேளையில், கருக்கலைப்பு, சட்டவிரோதம், ஒரு உயிரினைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை என இந்த சட்ட நீக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். தீர்ப்பிற்கு முன்பாக நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே சட்ட நீக்கத்தினை எதிர்ப்போரும், ஆதரிப்போரும் ஒரே இடத்தில் கூடி தங்கள் ஆதரவினையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். காவல்துறையினரின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி ஆங்காங்கே சிறிய அளவிலான தள்ளுமுள்ளு நிகழ, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டு பிரயோகம் செய்யப்பட்டு போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.


உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையின் மூலமாக அமெரிக்கா முழுமைக்குமாக நடப்பில் பெண்களுக்கு இருந்த கருக்கலைப்பிற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மருத்துவக் காரணங்களுக்காகவும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. இனி அந்தந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டிலேயே கருக்கலைப்புக்கு ஆதரிக்கும் வகையிலோ தடை செய்யும் வகையிலோ சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும். இச்சூழலில் ஏற்கெனவே சில மாகாணங்கள் கருக்கலைப்பினை தடை செய்துள்ள நிலையில் அந்த மாகாணங்களில் கருக்கலைப்புத் தடை உடனடியாக அமலாகும்.



அமெரிக்க அதிபர் ஜோ பிடேன்


அதிபரின் கருத்து அழுத்தம் கொடுக்குமா?


இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் உச்சநீதிமன்றத்தின் இந்த நகர்வினை, இது தீவிர சித்தாந்தத்தினை அமல்படுத்தும் பிழை என தெரிவித்துள்ளார். மேலும், அந்தந்த மாகாணங்கள் பெண்களின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு கருக்கலைப்பு தடையுள்ள மாகாணங்களில் இருந்து வேறு மாகாணங்களுக்கு கருக்கலைப்பு செய்யச் செல்வோருக்கு சரியான உதவியினை வழங்க தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில் மாகாணங்கள் எப்படியான சட்டங்களை நடைமுறைப்படுத்த போகின்றன என்ற முடிவுகளில் போராட்டங்கள் குறிப்பிட்ட அழுத்தங்களைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.