நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 12க்கும் மேற்பட்ட கூட்டங்களில் வாக்காளர்களிடம் கலந்துரையாடி, மூன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற லிஸ் டிரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார்.
வெள்ளிக்கிழமையன்று கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட தேர்தல் முடிவடைகிறது. கோடைகாலம் முழுவதும், வெளியுறவுத்துறை செயலாளர் டிரஸ்-க்கு எதிராக முன்னாள் நிதித்துறை அமைச்சர் ரிஷி சுனக் பிரசாரம் மேற்கொண்டார்.
கன்சர்வேட்டிவ் கட்சி தலைவருக்கான தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அன்று அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணியிடம் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்கு முன்பாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜான்சன் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஒரு மாதம் ஆன நிலையில், 2,00,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. அஞ்சல் மற்றும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்களிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இன்று மாலை 5:00 மணிக்கு (1600 GMT) முடிவடைகிறது.
உறுப்பினர்கள் மத்தியில் சுனக்கை காட்டிலும் டிரஸ் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு நாட்டின் பிரச்னைகளை தீர்க்க சிறிது காலமே உள்ளது. உக்ரேன் - ரஷிய போரின் பின்னணியில் எரிசக்தியின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உயர்ந்தது. இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு பிரிட்டன் மக்கள் வாழ்க்கை செலவில் சிக்கி உள்ளனர்.
வரி குறைக்கப்படும் என டிரஸ் உறுதியளித்திருந்தாலும் ஏழை மக்களுக்கு அது எந்த வித பயனும் அளிக்காது என கருத்துகணிப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர். பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய போரிஸ் ஜான்சன் தொடர் சர்ச்சையில் சிக்கிய நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், அதுவரை கட்சியின் தலைவராக ரிஷி தொடர கட்சி எம்பிக்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், கட்சி உறுப்பினர்கள், லிஸ் டிரஸ் பின் திரண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முன்னாள் தாராளவாத ஜனநாயகவாதியான லிஸ் டிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை எதிர்த்தவர்.
யார் தலைவராக பொறுப்பேற்றாலும், கடந்த 12 காலமாக ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியை அடுத்த தேர்தலில் வெற்றி பெற வைப்பது என்பது பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.