உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்:
பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் போட்டியில் போட்டியிட்டு, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.
ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இது தனக்கான நேரம் இல்லை என கூறி அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். குடியரசு யூத கூட்டணி என்ற அரசியல் இயக்கத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட மைக் பென்ஸ், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"இது என்னுடைய நேரம் அல்ல"
அப்போது பேசிய அவர், "இது என்னுடைய நேரம் அல்ல. எனக்கு தெளிவாகிவிட்டது. நீண்ட பிரார்த்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்" என்றார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடியரசு கட்சியை பொறுத்தவரையில், இன்னமும் முன்னாள் அதிபரின் ட்ரம்பின் ஆதிக்கமே தொடர்ந்து வருகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி வகித்தபோது, துணை அதிபராக பதவி வகித்த மைக் பென்ஸ், அவருடன் இணக்கமாகவ இருந்து வந்தார். பதவி நீக்கம், விதிமுறை மீறல் என பல்வேறு சர்ச்சைகளில் ட்ரம்ப் சிக்கிய போதிலும், அவருக்கு பயங்கர விசுவாசமாக இருந்து வந்தவர் மைக் பென்ஸ்.
ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் பைடன் பெற்ற வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப், அதற்கு எதிராக பல சதி செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ட்ரம்புடன் இணைந்து செயல்பட பென்ஸ் மறுத்துவிட்டார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பைடனுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி, வெற்றி சான்றிதழ் அளிக்கப்போது, அதை தடுக்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர், "மைக் பென்ஸை தூக்கிலிடு" என கோஷம் எழும் அளவுக்கு பிரச்னை முற்றியது.