US Ready to Attack Iran: எல்லாம் ரெடி; ட்ரம்ப் தலையசைச்சா போதும்; ஈரான் மீது தாக்குதல் எப்போது.? வெளியான முக்கிய தகவல்
மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப்பின் தலையசைப்பிற்காக படைகள் காத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் எப்போது நடைபெறலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவரும் அமெரிக்கா, மறுபுறம் மத்திய கிழக்கில் தனது படைகளை குவித்துள்ளது. ஒரு நீண்ட போருக்கு தேவையான அளவிற்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா எப்போது தாக்குதல் நடத்தும் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெறும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
கடந்த 2018-ல் தான் ரத்து செய்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பதிலாக, புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி, ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஏற்கனவே ஓமனில் நடைபெற்ற இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானுக்கு அது மோசமான நாளாக அமையும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய கிழக்கில் குவிக்கப்பட்ட அமெரிக்க படைகள்
எனினும், முதல் நாள் பேச்சுவார்த்தைக்குப்பின் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர், பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக இருந்ததாக தெரிவித்தார். ஆனால், மறுபுறம் அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்துள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த கையோடு, போர்க்கப்பல் உள்ளிட்ட கூடுதல் ராணுவத் தளவாடங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், மத்திய கிழக்கில் தற்போது அமெரிக்காவின் 13 பேர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன், 9 டெஸ்ட்ராயர் கப்பல்கள் மற்றும் 3 லிட்டோரல் போர்க்கப்பல்கள் அடங்கும்.
அதோடு, உலகின் மிகப்பெரிய விமானம் தாஙகி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட், கரீபியனில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தாக்குதல் எப்போது.? ட்ரம்ப்பின் தலையசைப்பிற்காக படைகள் காத்திருப்பு
இந்த சூழலில், CNN அறிக்கையின்படி, இந்த வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பதில் ட்ரம்ப் இன்னும் உறுதியாக இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்க தலைமைத் தளபதி, தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதிட்டதாகவும், சிறந்த நடவடிக்கை குறித்து ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வார இறுதிக்குள் அவர் ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "அவர் இதைப் பற்றி யோசிப்பதில் நிறைய நேரம் செலவிடுகிறார்," என்று அவருக்கு நெருங்கிய ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கில், ஈரானை தாக்கும் வகையில் அமெரிக்க படைகள் தயாராக இருப்பதாகவும், ட்ரம்ப்பின் தலையசைப்பிற்காகத்தான், அதாவது உத்தரவிற்காகத் தான் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.























