தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய புலம்பெயர்ந்தோரின் கலாசார நிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டு களித்தார். பிரமதருக்கு கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளுடன் இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.
இந்திய வம்சாவளியினரின் வரவேற்பில் உற்சாகமடைந்த பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
இந்தியாவுடனான கலாசார தொடர்பை நிலைநிறுத்தி, உயிர்ப்புடன் வைத்திருப்பதில் புலம்பெயர்ந்தோரின் உணர்வை மோடி பாராட்டினார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது! என தெரிவித்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது என கூறியுள்ள பிரதமர் மோடி, வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை என கூறியுள்ளார். அதோடு, பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். எனவே, இந்தக் கலாச்சாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது எனவும் பிரதமர் மோடி தனது தமிழ் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மற்றொரு பதிவில், ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர், இந்த பாசம் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான நீடித்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். மேலும், வரலாற்றில் வேரூன்றி, பகிரப்பட்ட மதிப்புகளால் வலுப்படுத்தப்பட்ட இந்த உறவுகள், தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன! என கூறியுள்ளார்.