Modi On Trump: அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரவேற்பு:
காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நீடித்து வரும், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபட் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தார். அதனை ஹமாஸ் குழுவினர் பகுதியளவு ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காஸாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அதிபர் ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரவளிக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்ந்து ஆதரவு
அண்மையில் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்தபோதும், பிரதமர் மோடி தனது ஆதரவை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான பதிவில், “காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அதிபர் டொனால்ட் ஜே. ட்ரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், பெரிய மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் நீண்டகால மற்றும் நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான பாதையை வழங்குகிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் ட்ரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியைப் பாதுகாப்பதற்கான இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என மோடி தெரிவித்து இருந்தார். இதனை அதிபர் ட்ரம்பும் தனது சமூகவலைதளபத்தில் பகிருந்து இருந்தார்.
அமைதி ஒப்பந்தம்:
ஹமாஸ் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் (அமெரிக்க நேரப்படி) தனது அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் நரகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று வெள்ளிக்கிழமை அதிபர் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். அதனைதொடர்ந்து,”போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினர் படிப்படியாக வெளியேறுதல், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல், உதவி மற்றும் மீட்பு முயற்சிகள், பாலஸ்தீனத்தை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு, ட்ரம்ப் தலைமையிலான இடைக்கால நிர்வாகம்” உள்ளிட்ட அமைதி ஒப்பந்தத்தின் அம்சங்களை ஹமாஸ் குழுவினர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அந்த குழுவினர் ஆயுத நடவடிக்கைகளை கைவிடுவது போன்ற அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.