Gaza Deal PM Modi: ஹமாஸ் உடனான காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரவேற்பு
காஸாவில் அமைதியை திரும்ப கொண்டு வர அமெரிக்க அதிபர் முன்னெடுத்த திட்டத்தின் சில அம்சங்களை ஏற்று, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், "அதிபர் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும். காஸா மக்களுக்கு பணயக்கைதிகள் விடுதலையும், மேம்பட்ட மனிதாபிமான உதவியும் அவர்களுக்கு நிம்மதியைத் தரும் என்றும், நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்றும் நான் நம்புகிறேன்" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நேதன்யாகுவை பாராட்டுவதா?
ஹமாஸ் படையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே போரை தொடங்கியதாக, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசி வருகிறார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டின் ராணுவம் நடத்திய தாக்குதலில், காஸா பகுதியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக வரிசையில் காத்திருந்தவர்களையும், ஆயுதம் இல்லாத நிராயுதபாணிகளையும் போர் விதிகளை மீறி, இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்ததாக கடும் விமர்சனங்கள் நிலவுகின்றன. அண்மையில் ஐ,நாஅ. சபையில் நேதன்யாகு உரையாற்றியபோது கூட, பல உலக நாடுகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமரை பாராட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முடிவுக்கு வரும் ஈராண்டு போர்:
காஸாவில் இரண்டு வருட மோதலை முடிவுக்குஇ கொண்டு வரும் விதமாக, முதல் கட்ட ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் நீடித்த அமைதி ஒப்பந்தத்தை நோக்கிய முதல் படியின் ஒரு பகுதியாக இஸ்ரேல் தனது படைகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளது.