PM Modi UN Summit: பிரதமர் மோடி அமெரிக்காவில் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா புறப்பட்டார்.


ஐ.நா., நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை:


குவாட் மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அதன் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில்' பங்கேற்று உரையாற்றினார். அப்போது, உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்ததோடு,  "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். 


மனித குல வெற்றி - மோடி


நிகழ்ச்சியில் பேசிய மோடி, “மனிதகுலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது, போர்க்களத்தில் அல்ல. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம். சீர்திருத்தம் பொருத்தத்திற்கு முக்கியமானது. டெல்லியில் நடபெற்ற உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக்கப்பட்டது. இது மாற்றத்தின் ஒரு முக்கியமான படியாகும். நிலையான வளர்ச்சி வெற்றிகரமானதாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். மேலும் எங்கள் வெற்றியின் இந்த அனுபவத்தை முழு உலகளாவிய தெற்கிலும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என உறுதியளித்தார்.


இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு - மோடி


டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், “"தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமச்சீர் ஒழுங்குமுறை தேவை. தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகை நமக்குத் தேவை. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக்கூடாது. உலகளாவிய நன்மைக்காக, இந்தியா அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது" என மோடி தெரிவித்தார்.


இந்தியாவின் குறிக்கோள் - மோடி


தொடர்ந்து, “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்" மற்றும் "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கட்டம்" போன்ற இந்தியாவின் முன்முயற்சிகளிலும் இந்த அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது. அனைத்து மனிதகுலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உலகளாவிய செழிப்பிற்காகவும் இந்தியா சிந்தனை, வார்த்தைகள் மற்றும் செயல்களில் தொடர்ந்து பணியாற்றும்” என பிரதமர் மோடி பேசினார்.


ஜெலன்ஸ்கி உடன் சந்திப்பு:


ஐ.நா., நிகழ்ச்சிகளுக்கு இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைனில் நிலவும் மோதலுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது” என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று அர்மீனியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். 


இதனை தொடர்ந்து, தனது மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.