ஜப்பானில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உள்ள பென்குயின்கள் மலிவு விலை மீனை உண்ண மறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பொருளாதார சிக்கலில் ஜப்பான்:


 உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பொருளாதார மந்த நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பணவீக்கமும் நாளுக்குநாள் அதிகமாகும் சூழ்நிலையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் நிலையற்றத் தன்மையே நிலவுகிறது. இதனால், அரசுகள் செலவீனங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. பொதுவாக இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகள் மனிதனுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைத்துவந்த நிலையில், இது விலங்குகளையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.


மாற்றப்பட்ட உணவு:


ஜப்பான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், வித்தியாசமான பிரச்சனை ஒன்றை சந்திக்கிறது அங்குள்ள அக்வாரியம். ஜப்பானின் கனகவா பகுதியில் உள்ள ஹகோன் என் அக்வாரியத்தில் நீர் நாய், பெங்குயின், ஆமைகள், பலவிதமான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அங்கு வளரும் பெங்குயின்களுக்கு முன்பு விலை அதிகமான ஹார்ஸ் மாக்கெரல் என்ற மீன் உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவைகளுக்கு விலை குறைந்த மாக்கெரல் மீன்கள் உணவாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.




உண்ண மறுக்கும் பெங்குவின்கள்:


இங்கு தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அக்வாரியம் நிர்வாகத்திற்கு. இதுநாள் வரை விலை உயர்வான சுவையான ஹார்ஸ் மாக்கெரல் மீன்களை தின்று ருசி கண்ட பெங்குயின்கள் தற்போது விலை குறைந்த மாக்கெரல் மீன்களை உண்ண மறுக்கின்றன. ஹார்ஸ் மாக்கெரல் என்று நினைத்து மீனை வாயில் வாங்கும் பெங்குயின்கள் அது மலிவு விலை மீன் என்று சுவையில் தெரிந்ததும் உண்ணாமல் துப்பிவிடுகின்றன. சில பெங்குயின்கள் புதிய மீனை பார்க்க கூட மறுக்கின்றன.


பெங்குயின்கள் மட்டுமல்லாது நீர் நாய்களும் புதிய மீன்களை விரும்பவில்லை என்று அக்வாரியம் பணியாளர்கள் கூறியுள்ளனர். வாயில் மீனை வாங்கும் அவைகள் உடனடியாக துப்பிவிடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால், புதிய மீன்களை விரும்பாத பெங்குயின்களுக்கு முன்பு வழங்கிய மீன்வகைகளையே வழங்குவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




சமூக வலைதளங்களில் கண்டனம்:



இவைகளை அக்வாரியத்தில் வைத்து ஏன் துன்புறுத்த வேண்டும். அதன் வாழ்விடங்களில் விட்டுவிட்டால் தங்களுக்கான உணவை தானேத் தேடிக்கொள்ளும். அவைகளுக்குப் பிடிக்காத உணவைக் கொடுத்து அவைகளை பட்டினியில் தள்ளி கொன்றுவிடாதீர்கள் என்று அருங்காட்சியகத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.