கராச்சியில் பிப்ரவரி 1 முதல் பெண்களுக்கான இளஞ்சிவப்பு பேருந்து சேவையை தொடங்க பாகிஸ்தான் அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தானில் பணிபுரியும் பெண்களின் பயணப் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மாகாண போக்குவரத்து அமைச்சர் ஷர்ஜீல் மேமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இத்திட்டத்தின் படி, முதல் கட்டமாக கராச்சியில் இரண்டு வழித்தடங்களில் பெண்களுக்கு மட்டும் இளஞ்சிவப்பு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.  அதில்,  மாடல் காலனி, ஷாஹ்ரா-இ-ஃபைசல், மெட்ரோபோல், II சுந்த்ரிகர் சாலை வழியாக மேரேவெதர் டவர் வரை பேருந்து செல்லும்,  இரண்டாவது  பேருந்தின் பயணப்பாதை மேரேவெதரில் இருந்து இயக்கப்பட்டு சதார் வழியாக மாவட்ட மையத்திற்கு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிந்து மாகாண தகவல்துறை அமைச்சர் ஷர்ஜீல் மேமன் கூறுகையில், காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இளஞ்சிவப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்றும் அதன்பின் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பெண்களுக்கான இந்த பேருந்து இயக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பேருந்தில்  கட்டணம் ரூ.50 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


கராச்சியில் ஆரஞ்சு, சிவப்பு மற்றும் வெள்ளை பேருந்துகளுக்குப் பிறகு, பெண்களுக்கான இளஞ்சிவப்பு பேருந்து சேவையைத் தொடங்குவதாக மாகாண அமைச்சர் கூறினார். "அதிக குடிமக்களுக்கு நவீன பொது போக்குவரத்தை வழங்கும் நோக்கத்துடன் கூடிய விரைவில் கராச்சியின் 4, 5, 6 மற்றும் 7 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன எனவும் மாகாண அமைச்சர் கூறியுள்ளார். 


இளஞ்சிவப்பு பேருந்து சேவையானது கராச்சியின் முதல் பொது போக்குவரத்து சேவையாகும். முதற்கட்டமாக 8 பேருந்துகள் இளஞ்சிவப்பு பேருந்து சேவைக்காக வாங்கப்பட்டுள்ளன எனவும் சிந்து மாகாணத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. 


பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், பெண்கள் பயன்படுத்துவதை எளிதாக்கவும் மேமன் விரும்புகிறார். அவசர நேரத்தில் பயணிப்பவர்களில் 50% பெண்கள் என்றும், அவர்கள் கண்ணியமான முறையில் சவாரி செய்வதற்குப் பேருந்தில் போதுமான இடம் இல்லை என்றும் நாங்கள் மதிப்பிட்டுள்ளோம் என மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் ஷர்ஜீல் மேமன் கூறியுள்ளார். 


இந்த பேருந்துகளில் 24 பேர் அமர முடியும், மேலும் 24 பேர் விசாலமான இடைகழிகளில் நிற்க முடியும் என்று ட்ரிப்யூன் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இருக்கைகளும் உள்ளன. பணியாளர்கள் பெண்கள் மற்றும் நிறுவனம் வாகனத்திற்கு பெண் ஓட்டுனர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.


பெண்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொது போக்குவரத்தை தொடங்க பாகிஸ்தான் அரசு முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டில், மத்திய அரசு லாகூரில் இதேபோன்ற சேவையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்துக்கு அரசாங்கம் நிதியுதவியை முறையாக வழங்காததால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதேபோன்ற திட்டம் தமிழ்நாட்டில், கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சகத்தின் சார்பில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தின் முகப்பு மற்றும் பின் புறங்களில் இளஞ்சிவப்பு அதாவது பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.