இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதனால் தான், தான் அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபர் தெரிவித்துள்ளார். 


"அவர் மக்களை தவறாக வழிநடத்துவதால் நான் இதைச் செய்தேன். என்னால் தாங்க முடியவில்லை. அவர் பேரணியைத் தொடங்கிய அன்றே இதைச் செய்ய முடிவு செய்தேன்" என கைது செய்யப்பட்ட நவீத் காவல் துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது இன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


பாகிஸ்தான் நாட்டின் ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் , அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணியை, பிடிஐ கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நடத்திய நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது.


 






இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணி குழப்பத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கான், அந்நாட்டின் தற்போதைய அரசின் ஊழல், முறைகேடு ஆகியவற்றைக் கண்டித்து, ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தியும் கடந்த சில நாள்களாக பிடிஐ கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.


அதன்படி இன்று குஜ்ரன்வாலாவில் உள்ள அல்லா வாலா சவுக் அருகே பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இம்ரான் கான் உள்பட மொத்தம் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய நவீத் எனும் நபர் உடனடியாக சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.


இச்சூழலில், மொத்தம் இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும், ஒருவர் பிஸ்டல் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் மற்றொருவர் தானியங்கி துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், தான் தனித்தே இயங்கியதாகவும் தன் பின்னால் எந்த அமைப்புமோ நபர்களுமோ இல்லை என்றும் நவீத்  அந்நாட்டு செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.


தான் வசிராபாத்துக்கு பைக்கில் வந்ததாகவும், தன் பைக்கை தனது மாமாவின் கடையில் விட்டு விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் நவீத் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.