Trump-Asim Munir Meet: அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவிற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிரை அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அசிம் முனிர், அதிபர் ட்ரம்ப் உளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் மறுத்த அமெரிக்கா
இந்தியா பாகிஸ்தான் மோதலின்போது, இரு நாடுகளுக்கும் சமாதானம் செய்து வைத்ததாக ட்ரம்ப் கூறிவருகிறார். ஆனாலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் ஒருபுறம் இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் அந்நாட்டு ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவிற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அசிம் முனிர் விழாவிற்கு அழைக்கப்படவே இல்லை என அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்காவில் அசிம் முனிர் சுற்றுப்பயணம்
கடந்த 14-ம் தேதி, அதாவது சனிக்கிழமை, அமெரிக்காவின் ராணுவ விழா நடைபெற்ற நிலையில், 15-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக் கிழமையன்று, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர், 5 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று அவர் அமெரிக்க அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரலின்படி, வெள்ளை மாளிகையில் உள்ள கேபினட் அறையில், ட்ரம்ப்பை சந்திக்கிறார் அசிம் முனிர்.
இதைத் தொடர்ந்து, இந்த அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புகளின் போது, அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உறவுகள் குறித்து அசிம் முனிர் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அசிம் முனிருக்கு பலத்த எதிர்ப்பு
இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தானியர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அசிம் முனிர் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அருகே பலர் அசிம் முனிருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “அசிம் முனிர், நீ ஒரு கோழை“, “நீ ஒரு அவமானம்“, “பாகிஸ்தானியர்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரி“ என்றெல்லாம் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபின், அசிம் முனிர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க பயணம் இது. இரு நாடுளுடனான மோதலை தானே தடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், இந்தியா அதை மறுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ட்ரம்ப்பை சந்திப்பது, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.





















