USA Trump: இங்கிலீஷ் பேச வரலை, உனக்கு எதுக்கு வேலை.. உடனே நீக்கம், ட்ரம்ப் நிர்வாகத்தால் இந்தியர்கள் ஷாக்
US Truck Drivers: அமெரிக்காவில் ஆங்கில மொழி தேர்வில் தோல்வியுற்றதால், 7 ஆயிரம் லாரி ஓட்டுனர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

US Truck Drivers: அமெரிக்காவில் ஆங்கில மொழி தேர்வில் தோல்வியுற்றதால், வேலையிழந்த லாரி ஓட்டுனர்களில் பெரும்பாலனோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இங்கிலீஷில் ஃபெயில்
இந்தியா - அமெரிக்கா இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துவரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்நிலையில் தான், இந்த வருடத்தில் மட்டும் 7,000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் கட்டாய ஆங்கிலப் புலமைத் தேர்வுகளில் தோல்வியடைந்ததால், அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க போக்குவரத்து அமைச்சர் சீன் டஃபி அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்களுடன் தொடர்புடைய அடுத்தடுத்த பெரிய சாலை விபத்துகளைத் தொடர்ந்து, இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டஃபியின் கூற்றுப்படி, ஃபெடரல் மோட்டார் கேரியர் பாதுகாப்பு நிர்வாகத்தின் (FMCSA) நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில், ஜுலை மாதம் வரை வெறும் 1,500 பேர் இந்த முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 2025 நிலவரப்படி அந்த எண்ணிக்கை 7,248 ஆக உயர்ந்துள்ளது. கடந்த கோடை காலத்தில் இருந்து இந்த விதி விதி மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு, மொழி அமலாக்கத்தில் அமெரிக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது.
பாதிக்கப்படும் இந்தியர்கள்:
வட அமெரிக்க பஞ்சாபி லாரி ஓட்டுநர்கள் சங்கம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 130,000 முதல் 150,000 வரையிலான லாரி ஓட்டுநர்கள் தற்போது அமெரிக்காவில் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளது. அவர்களில் ஆயிரக்கணக்கானோர், இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் தளவாட முதுகெலும்பின் முக்கிய பகுதியாக இருக்கும் சமூகத்தில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் கடும் மொழி கட்டுப்பாடுகள்:
மொழி தடைகள் காரணமாக மட்டுமே லாரி ஓட்டுனர்களை, போக்குவரத்து காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்வதை ஏற்க முடியாது என 2016ம் ஆண்டில் அப்போதைய அதிபர் ஒபாமா எச்சரித்து இருந்தார். ஆனால், அதனை ட்ரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளதை தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறை மொழி புலமை திறனில் தீவிரம் காட்டுகிறது. "வணிக லாரிகளை இயக்கும் ஓட்டுநர்கள் ஆங்கிலம் பேசவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்பது கட்டாயம். இல்லையெனில் அவர்கள் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள்" என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சாலையோர சோதனைகளை பல மாநிலங்கள் கடுமையாக்குவதால், பணி நீக்க நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக சரக்கு அறிக்கை நிறுவனமான FreightWaves தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி விதி 49 CFR 391.11(b)(2) இன் கீழ், வணிக ஓட்டுநர் உரிமம் (CDL) வைத்திருக்கும் எவரும் அடையாளங்களை சரியாக படிப்பது, சட்ட அமலாக்கத்துடன் தொடர்புகொள்வது மற்றும் துல்லியமான ஓட்டுநர் பதிவுகளைப் பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி, ஆங்கிலத்தில் கலந்துரையாடும் திறனை பெற்றிருப்பது கட்டாயம் என்பது விதியாகும். அதனை பூர்த்தி செய்ய தவறும் நபர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
கடும் நடவடிக்கையை தூண்டும் விபத்துகள்:
இந்திய லாரி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் அதிகரிப்பு இந்த கடும் நடவடிக்கையைத் தூண்டியுள்ளது. அக்டோபரில், கலிபோர்னியா நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் மூன்று அமெரிக்கர்களைக் கொன்றதாக ஒரு இந்திய ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது. புளோரிடா டர்ன்பைக்கில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஆவணமற்ற இந்திய குடியேறியவர் ஓட்டிச் சென்ற டிராக்டர்-டிரெய்லர் ஆபத்தான யு-டர்ன் எடுத்ததில் மூன்று பேர் இறந்தனர். ஏபிசி செய்திகளின்படி, ஓட்டுநர் தனது வணிக ஓட்டுநர் தேர்வில் பலமுறை தோல்வியடைந்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு குவியும் எதிர்ப்பு:
இந்தக் கொள்கை நெடுஞ்சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதாக கூட்டாட்சி அதிகாரிகள் வாதிடுகின்றனர். ஆனால். தெற்கு எல்லைக்கு அருகிலுள்ள தொழில்துறை குழுக்களை சேர்ந்தவர்கள், ”இது நியாயமற்ற முறையில் இருமொழி பேசும் மற்றும் ஆங்கிலம் பேசாத ஓட்டுநர்களை குறிவைப்பதாக” குற்றம்சாட்டுகின்றனர்.
"எங்களிடம் பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இயக்கி வரும் ஓட்டுநர்கள் உள்ளனர், ஆனால் இப்போது சாலையோர ஆய்வின் போது ஆங்கிலத்தில் வேகமாக பதிலளிக்க முடியாததால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்" என்று டெக்சாஸின் ஃபாரரில் உள்ள ஒரு டிரக்கிங் நிறுவனமான யுனிமெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அடால்பெர்டோ கேம்பெரோ கூறினார். கிட்டத்தட்ட 2 லட்சம் புலம்பெயர் ஓட்டுனர்களை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையே இது என, வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





















