அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையின் சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் சென்றடைந்துள்ள நிலையில் 20 க்கும் மேற்பட்ட சீன இராணுவ விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சென்றுள்ளன. இது குறித்து குறிப்பிட்டுள்ள தீவின் பாதுகாப்பு அமைச்சகம், ''"21 PLA விமானம் ... ஆகஸ்ட் 2, 2022 அன்று தைவானின் தென்மேற்கு ADIZ இல் நுழைந்தது" எனக் குறிப்பிட்டுள்ளது.
நான்சி பெலோசியின் தைவான் பயணம் அமெரிக்கா - சீனா இடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது. ட்விட்டரில் மூன்றாம் உலகப்போர் என ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
என்ன நடக்கிறது?
அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிகழ்ந்து வரும் நிலையில், தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. உலக அரங்கில் இந்த பிரச்னையை மூடி மறைப்பது என்பது சமீப காலமாகவே கடினமாக மாறி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையின் சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்.
தனித் தன்மை வாய்ந்த ஜனநாயக அரசை கொண்டுள்ள தைவானுக்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவியை வகிக்கும் ஒரு தலைவர் செல்வது அமெரிக்கா - சீன நாடுகளுக்கிடையே பிரச்னையாக வெடித்துள்ளது. அமெரிக்க அரசின் அலுவலர்கள் தைவானுக்கு அடிக்கடி சென்றாலும், சீன நிலப்பரப்பில் இருந்து ஒரு குறுகிய நீரால் பிரிக்கப்பட்டிருக்கும் தைவானுக்கு, பெலோசி பயணம் மேற்கொள்வது சீனாவுக்கு ஆத்திரத்தை மூட்டும் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபராக வருவதற்கு அவருக்கு வாய்ப்புள்ளதாலும் அவர் வகிக்கும் பதவியாலும் அவர் ராணுவ போக்குவரத்துடன் தைவானுக்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிலவிய நிலையில் அது நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உடல நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது படையில் உலகின் பெரிய நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் சீறிக்கொண்டிருப்பதால் மீண்டும் ஒரு போர் தொடங்குமா என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.
முன்னதாக, இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, நெருப்போடு விளையாட வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார். இதுகுறித்த தகவல் சீன அரசு ஊடகத்தில் வெளியானது.