திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் தன் உயிரை பணயம் வைத்து இரண்டு குழந்தைகளை ஒருவர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஓமன் நாட்டின் அல் டக்கிலியாப் பகுதியைச் சேர்ந்தவர் அலி பின் நாசர் அல் வார்டி. இவர் தனது தந்தையுடன் அன்று பெய்த மழை பற்றி கடந்த வெள்ளிக்கிழமையன்று பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது எங்காவது வெளியில் செல்லலாம் என்று அவர் கூறியதையடுத்து இருவரும் பிரபல சுற்றுலாத் தலமான வடி பலா (wadi bahla) விற்குச் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு சென்ற போது வடி பலா பகுதி பருவகாலத்தின் தொடக்கத்தில் இருந்தது.






இருவரும் இயற்கையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. இவர்கள் இருந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் நடுவில் இரண்டு குழந்தைகள் சிக்கித் தவிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கில் நடுவில் கிடைத்த கொம்பைப் பிடித்துக்கொண்டு இருவரும் நின்றாலும், குழந்தைகளை உடனடியாக மீட்கவில்லை என்றால் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்ற நிலையில் அல் வார்டி உடனடியாக செயலில் இறங்கினார். 


கயிறு ஒன்றை எடுத்துவந்த அவர் ஒருமுனையை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மறுமுனையை தனது தந்தையிடம் கொடுத்து பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு வெள்ளத்தின் நடுவே பாய்ந்தார் அல் வார்டி. வெள்ளத்தினிடையேப் போராடிச் சென்ற அவர் இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக பிடித்துக்கொண்டார். நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையிலும் போராடி இரண்டு குழந்தைகளையும் கரைசேர்த்தார்.




இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அல் வார்டி, “சாவின் விளிம்பில் இருந்த இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிறிது அவகாசம் மட்டுமே இருந்தது. அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. அந்த குழந்தைகளை காப்பாற்ற உதவி செய்யுமாறு கடவுளை வேண்டிக்கொண்டேன். 13 மற்றும் 7 வயதான இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதைக் கண்ட அதிர்ச்சியில் கையில் கிடைக்கும் எதையாவது பிடித்துக்கொண்டு இருக்கும் படியும், பயப்படவேண்டாம் என்றும் உரத்தக்குரலில் கத்தினேன். ஆனால், அவர்கள் பிடித்துக்கொள்ள ஏதும் இல்லாத சூழ்நிலையில் நான் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்துக்கொண்டேன். அப்போது அவர்கள் இருவரது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. அவர்களை கட்டியணைத்த நான், எதற்கும் கவலைப்பட வேண்டாம், உங்களை இங்கிருந்து மீட்டுவிடுவேன் என்று கூறினேன். ஆனாலும், இளம் சிறுவன் பயத்தில் நான் தண்ணீரில் மூழ்கி சாக விரும்பவில்லை. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டான். பின்னர், கடுமையான வெள்ளத்தை எதிர்கொண்டு இருவரையும் காப்பாற்றினேன். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு உந்துதல் ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேசமயம் அவர்களை மீட்பதற்கு என்னை கருவியாகப் பயன்படுத்திக்கொண்டதற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.






குழந்தைகளை மீட்ட அல்வார்டியிடம் இருந்து கரையில் நின்றவர்கள் அவர்களைப் பெற்றுக்கொண்டதுடன், அவரையும் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரையேறும் வரை உதவி செய்து காப்பாற்றினர். 


அல் வார்டியின் இந்த செயலைப் பாராட்டி அல் தகிலியா அரசு அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளதோடு, பல்வேறு அமைப்புகள், ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதேசமயம், அல்வார்டி வெள்ளத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.