உலகின் வயதான பெண்மணி என்ற சாதனைக்கு புதிய சொந்தக்காரர் ஆகி உள்ளார் மரியா பிரானியாஸ் மோரேரா. உலகின் வயதான நபருக்கான புதிய கின்னஸ் சாதனை அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தேதி நிலவரப்படி, அவரின் வயது 115 ஆண்டுகள் 322 நாள்கள் ஆகும். 


இதற்கு முன்பு, 118 வயதான லூசில் ராண்டன் உலகின் வயதான நபராக இருந்துள்ளார். இவர், ஜனவரி 17ஆம் தேதி உயிரிழந்தார். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மரியா, கடந்த 1907ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி பிறந்தார்.


உலகின் வயதான பெண்மணி பற்றிய தகவல்கள்..!


கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த மரியா பிரான்யாஸ் மோரேரா 4 மார்ச் 1907இல் பிறந்தார். அமெரிக்காவுக்கு அவரது பெற்றோர் குடிபெயர்ந்த ஒரு வருடத்திற்குப் பிறகு பிறந்துள்ளார்.


எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஸ்பெயினுக்குத் திரும்பி கேட்டலோனியாவில் குடியேறினர். அன்றிலிருந்து மரியா அங்கேயே வசித்து வருகிறார். மரியாவின் தந்தை நுரையீரல் காசநோயால் உயிரிந்தார். அமெரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு அட்லாண்டிக் கடற்பயணம் மேற்கொண்டபோது உடல் நலம் குன்றி உயிரிழந்தார்.


ரெசிடென்சியா சான்டா மரியா டெல் டுரா என்ற முதியோர் இல்லத்தில் கடந்த 22 ஆண்டுகளாக மரியா தங்கியுள்ளார். மரியாவுக்கு மூன்று குழந்தைகள், 11 பேரக்குழந்தைகள் மற்றும் 13 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். மரியா தனது சகோதரர்களுடன் விளையாடும் போது கீழே விழுந்ததால் ஒரு காதில் கேட்கும் திறனை இழந்தார்.


அவரிடம் voice-to-text சாதனம் உள்ளது. இது அவரது குடும்பத்தினரை அவருடன் தொடர்பு கொள்ள பயன்படுகிறது. அவரது கணவர் ஜோன் மோரெட் என்ற  மருத்துவர் ஆவார். மரியா, இவரை 1931-இல் திருமணம் செய்து கொண்டார்.


 






1915-இல் அவரது குடும்பம் முதல் உலகப் போரின் போது பார்சிலோனாவிற்கு குடிபெயர்ந்தது.


இரு உலகப் போர்கள், ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் மற்றும் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய் ஆகிய அனைத்தையும் கடந்து உயிர் வாழ்ந்துள்ளார். 2020இல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார்.


தனது 113வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில வாரங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டு, ஒரு சில நாட்களில் முழுமையாக குணமடைந்தார்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட உலகின் வயதான நபர் என்ற சாதனையை படைத்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவரது சாதனையை லூசில் ராண்டன் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.