வடகிழக்குச் சீனாவில் 1,40,000 வருடப் பழமையான மண்டையோடு ஒன்றை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். 85 வருடப் பழமையான கிணற்றிலிருந்து இந்த மண்டையோடு எடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கிறீர்களா?  இந்த மண்டையோடு பார்ப்பதற்கு ட்ராகன் மனித வடிவத்தில் இருப்பதுதான் இதில் சுவாரசியம். மனிதர்களின் மூதாதையர்களாகக் கருதப்படும்  நியாண்ட்ரதால், ஹோமோ எரெக்டஸ் ஆகியவற்றின் வரிசையில் இந்த ட்ராகன் மனிதன் எனப்படும் ஹோமோ லோங்கியும் தற்போது இடம்பெறுகிறது.




அது வயதான ஆணின் மண்டையோடு எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக நீண்ட, அகலமான பின்மண்டைப் பகுதி ஆழமான கண் பகுதி மற்றும் மூக்குப் பகுதி நன்கு வீக்கமடைந்து அகண்டு காணப்படுகிறது இந்த மண்டையோடு.சாதாரண மண்டையோட்டை விட 7 சதவிகிதம் பெரியதாக இந்த மண்டையோட்டின் மூளை இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று முழுமையான நிலையில் மண்டையோடுகள் அகழ்வாராய்ச்சியிலிருந்து கிடைப்பது அற்புதம் என வியந்துபோயுள்ளனர் சர்வதேச அகழ்வாராய்ச்சியாளர்கள். இதையடுத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த மண்டையோடுக்கு ஹோமோ லோங்கி எனப் பெயரிட்டுள்ளனர். ட்ராகன் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டதால் இதற்கு ட்ராகன் மேன் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 


நியாண்ட்ரதால்களை விட இந்த ட்ராகன் மனிதன்தான் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையதாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனை மற்ற ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.1930களில் வடகிழக்கு சீனாவை ஜப்பான் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்புதான் பெக்கிங் மேன் எனப்படும் ஒரு மண்டையோடு வகையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மண்டையோடுகள் ஜப்பானியர்களின் கரங்களுக்குச் சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை கண்டுபிடித்தவர் ஒளித்துவைத்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மனித பரிணாம வளர்ச்சியுடனான ஆசிய மனிதர்களின் மிக நெருங்கிய தொடர்பாக இந்த மண்டையோடு இருக்கலாம். 




 அதே சமயம் மனிதர்களுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகச் சொல்லப்படும் பிற பரிணாமங்களுடன் இந்த ட்ராகன் மேன் எந்தவகையிலும் ஒத்துப்போகவில்லை என்பதால் இது முழுக்க முழுக்க வேறொரு இனவகையாகவும் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதுதொடர்பாக இதுவரை  மூன்று ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 
இந்த ஆய்வுகளின் குறிப்பிட்டுள்ளதன்படி அந்த மண்டையோட்டுக்கு வயது 1,40,000க்கு மேல் 3,09,000க்குள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 


மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் இதுவரை ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே பூமியில் வாழ்ந்துவருவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் கிடைக்கின்றன. அதே சமயம், ஏழடி உயரம் பல மடங்குப்பெரிய மூளையுடன் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் இனம், சிறிய உருவங்களான ஹோமோ நாலிடி, ஹோமோ லூசோனென்ஸிஸ், ஹோமோ ஃப்ளோரோனென்ஸிஸ் ஆகியவையும் இருந்ததற்கான தரவுகள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா எனப் பரவலான பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்றன.