Nobel Peace Price 2025 Trump: அமைதிக்கான நோபல் பரிசை இதுவரை வென்ற அமெரிக்க அதிபர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
அடம்பிடிக்கும் ட்ரம்ப்:
எனக்கு வேண்டும் என கேட்டுவிட்டார்.. நட்பு நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளார்.. தனக்கே உரிய பாணியில் விமர்சிக்கவும் செய்துள்ளார்.. அதற்கும் மேலாக ஒன்றுமே செய்யாத பாரக் ஒபமாவிற்கு எல்லாம் வழங்கப்பட்டுள்ளதாக சாடினார்.. காரணம், அந்த அளவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வேண்டும் என்பதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். இதுவரை இல்லாத அளவில் இந்த முறை தனக்கு கட்டாயம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவர் பேசி வரும் நிலையில், தியோடர் ரூஸ்வெல்ட் வுட்ரோ வில்சன், ஜிம்மி கார்டர் மற்றும் ஒபாமா ஆகியோர் வரிசையில் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. ஆனாலும், இன்று காலை 11 மணியளவில் நார்வே நோபல் குழு அமைதிக்கான பரிசை அறிவிக்கும்போது, தனது பெயர் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் தீவிரமாக இருக்கிறார்.
ட்ரம்பின் தீராத ஆசை:
அமைதிக்கான நோபல் பரிசு மீதான ட்ரம்பின் ஆசை என்பது புதியதல்ல. அவர் ஏற்கனவே அதிபராக இருந்தபோதும் பரிந்துரைக்கப்பட்டார். இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான உறவை இயல்பாக்குவதற்கு உதவும், ஆப்ரஹாம் ஒப்பந்தத்திற்காக பரிந்துரை பட்டியலில் அவரது பெயர் இணைந்தது. ஆனால், இந்த முறை பதபியேற்ற சில மாதங்களிலேயே 6 முதல் 7 போர்களை நிறுத்தியுள்ளதாகவும், அதில் அணு ஆயுத போராக மாற வாய்ப்பிருந்த இந்தியா - பாகிஸ்தான் மோதலும் அடங்கும் என கூறி, நோபல் பரிசை வெல்வதை லட்சியமாக மாற்றியுள்ளார். அவரது உரிமை கோரலை இந்தியா மறுத்தாலும், பாகிஸ்தானின், இஸ்ரேல், கம்போடியா மற்றும் காபோன் பல நாடுகள் நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளது.
வாய்ப்பில்லை ராசா..
நட்பு நாடுகள் பலவும் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தாலும், அவை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. காரணம், பரிந்துரை செய்ய கடைசி நாளான பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் எந்தவொரு பரிந்துரை மனுக்களும் சமர்ப்பிக்கப்படவில்லை, இதனால் இந்த ஆண்டு அவை பரிசீலனைக்கு செல்லாது. ஆப்ரஹாம் ஒப்பந்தத்தை நிறுவுவதில் ட்ரம்பின் தலைமையை மேற்கோள் காட்டி, நியூயார்க் காங்கிரஸ் பெண்மணி கிளாடியா டென்னி தாக்கல் செய்த மனு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, டிரம்பின் சிறந்த பந்தயம் என்பது அடுத்த ஆண்டாக இருக்கலாம்.
சர்வதேச வல்லுநர்கள் சொல்வது என்ன?
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் வெல்ல, மிகக் குறைந்த அல்லது வாய்ப்பே இல்லை என நிபுணர்கள் கருதுகின்றனர். நோபல் குழு, வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும்போது, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட விரைவான ராஜதந்திர வெற்றிகளை விட, தொடர்ச்சியான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் ட்ரம்பின் முயற்சிகள், அவர் கூறியது போல் கள யதார்த்தத்துடனும் பொருந்தவில்லை அல்லது மிகைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றவில்லை என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கூடுதலாக, ”நோபல் பரிசு பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகளுக்கு டிரம்ப் பல வழிகளில் நேர்மாறானவர். அமைதிக்கான நோபல் பரிசு என்பது பலதரப்பு ஒத்துழைப்பைப் பாதுகாப்பது பற்றியது" என்று நோபல் பரிசு குறித்து புத்தகம் எழுதிய வரலாற்றாசிரியர் ஓய்விந்த் ஸ்டெனர்சன் தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டிற்கான நோபல் பரிசு யாருக்கு?
அண்மைக் காலங்களை போலவே, நோபல் குழு திரைக்குப் பின்னால் அமைதியாக வேலை செய்யும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளை தேர்வு செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ஜப்பானில் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களின் குழுவான நிஹான் ஹிடான்கியோவுக்கு வழங்கப்பட்டது.
2025 மோதல்களின் ஆண்டாக இருப்பதால், சூடானின் அவசரகால பதிலளிப்பு அறைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் எல்லைகளற்ற செய்தியாளர்களைப் பாதுகாக்கும் குழு போன்ற ஊடகக் கண்காணிப்பு அமைப்புகளை கௌரவிக்க வாய்ப்புள்ளது. ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் உயிரிழந்த அலெக்ஸி நவல்னியின் மனைவியான, யூலியா நவல்னாயாவும் நடப்பாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.