ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவிலும் பலத்த நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஜுர்ம் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, ரிக்டர் அளவுகோலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 133 கிமீ SSE இல் இரவு 10:17 மணிக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பாட்டுள்ளது.


9 பேர் உயிரிழப்பு:


பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 100க்கும் மேற்பட்டோர் நிலநடுகத்தால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தானின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரிவித்தார். பாகிஸ்தானின் சுகாதார துறை அமைச்சர் அப்துல் காதர் படேல், பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) மற்றும் மத்திய அரசின் பாலிக்ளினிக் ஆகியவற்றில் அவசர எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 9 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக  கூறப்பட்டுள்ளது.  






ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் சீனா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மக்கள் நன்றாகவே உணர்ந்தனர். திடீரென்று கட்டிடங்கள் குலுங்கியதாலும், வீடுகளில் உள்ள பொருட்கள் ஆட்டம் கண்டதாலும் வீடுகள், குடியிருப்புகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நடுரோட்டிற்கு வந்தனர்.


டெல்லியில் பலத்த நில அதிர்வின் காரணமாக நள்ளிரவில் வீட்டை விட்டு பலரும் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து இது போல் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.