நேபாளத்தில் புரட்சி வெடித்ததையடுத்து, ஆட்சியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேபாளத்தின் முழு கட்டுப்பாடு ராணுவத்திடம் வந்துள்ளது. இந்நிலையில், இடைக்கால அரசை அமைக்கும் பணிகளை ராணுவம் மேற்கொண்டுள்ளது. ஆனால், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
3 பெயர்களை பரிந்துரைக்கும் ஜென் Z போராட்டக் குழுவினர்
நேபாளத்தில், இடைக்கால அரசின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, அதிபர் மற்றும் ராணுவ தலைமை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜென் Z போராட்டக் குழுவினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, காத்மாண்டு மேயர் பாலேன் ஷா மற்றும் நேபாள மின்சார வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகியோரை, ஜென் Z போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.
இடைக்கால தலைவர் நியமனத்தில் நீடிக்கும் குழப்பம்
இப்படிப்பட்ட சூழலில், அந்த 3 பேரில் யாரை இடைக்கால பிரதமராக நியமிப்பது என்பதில் ஜென் Z குழுவினர் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலானவர்கள் குல்மன் கிசிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், சிலர் சுசீலாவை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனால், இடைக்கால அரசு அமைப்பதில் அங்கு இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும், நாளைக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஓரிரு நாட்களில் இடைக்கால புதிய பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் நடந்தது என்ன.?
நேபாளில், சர்மா ஒலி தலைமையில் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் அந்நாட்டு அமைச்சர்கள், ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகள் எந்த அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இதனால், நேபாள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பிரசாரத்தை ஒடுக்குவதற்காக, பதிவு செய்யப்படாத சமூக வலைதளங்களை கடந்த 4-ம் தேதியன்று நள்ளிரவு முதல் தடை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதையடுத்து, மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கடந்த 8-ம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் கூடி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு நடத்தியும், போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, ராணுவம் களமிறங்கி, நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் வசம் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இச்சூழலில் தான், இடைக்கார அரசை அமைக்கும் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால், அதில் குழப்பம் நீடித்து வருகிறது.