Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!

Myanmar-Thailand Earthquake: மியான்மர் மற்றும் தாய்லாந்தில் தொடர்ந்து 6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 144 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 732 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மியான்மரில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் இடிந்து விழும் காட்சிகளானது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 732க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கவலையை அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

மியான்மரில் இன்று  ( மார்ச் 28, 2025) காலை சுமார் 11 மணியளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ​மேலும், இந்த நிலநடுக்கமானது, மியான்மரின் அண்டை நாடுகளான இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்காள தேசம் மற்றும் சீனாவிலும் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

மியான்மரின் சாகிங் நகரின் வடமேற்கே, காலை 11.45 மணியளவில்  7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, 12. 02 மணியளவில், அதே பகுதியில் 7 ரிக்டர் அளவிலான அடுத்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து மூன்றாவதாக, 12.57 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5 என்றும், நான்காவதாக 4.9 அளவுகோல் அளவிலும், 5வதாக 2.48 மணியளவில் 4.4 என்ற அளவிலும் மற்றும் 6வதாக 3.25 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

சிக்கித் தவிக்கும் மக்கள்:

தாய்லாந்து தலைநகரில், கட்டுமானத்தில் இருந்த 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 43 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு அலுவலகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரமாண்டமான கட்டடம் சில நொடிகளில் தரைமட்டமாகிய நிலையில், இடிபாடுகளின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மியான்மரில், ஒரு மசூதியின் பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் மண்டலேயில் உள்ள 90 ஆண்டுகள் பழமையான அவா பாலமும், நிலநடுக்கத்தின் காரணமாக இராவதி ஆற்றில் இடிந்து விழுந்தது.

நிலநடுக்கத்தால், மியான்மரில் உள்ள மண்டலே பல்கலைக்கழகத்தில் தீ விபத்து ஏற்பட்ட காட்சிகள்

இந்நிலையில், நிலநடுக்கத்தால் இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 732க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாவும் , ஆயிரக்கணகானோர் மருத்துவமனயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்கு உள்ள மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தங்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது. 

பிரதமர் மோடி ஆறுதல்:


இந்த தருணத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, “ மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன். இந்தியா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement