உலகெங்கும் சமூக வலைதளம் மயம்தான். இதில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை விரைவில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், ஐரோப்பிய கண்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விதிமுறைகளை ஏற்கவில்லை. இதனால், ஐரோப்பிய கண்டத்தில் மெட்டா நிறுவனம் இயங்குவதில் சிக்கல் நிலவுகிறது. EU-US Privacy Shield என்ற ஒப்பந்தத்தின்படி, மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்த செயலிகள் ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து மெட்டே வெளியேற வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறும் எண்னம் மெட்டா நிறுவனத்திற்கு இல்லை. ஆனால், ஐரோப்பிய- அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை நம்பி இயங்கி வருகிறது. இதனால், தனி உரிமை பாதுகாப்பு நெறிமுறைகளை சரியாக பின்பற்றி தொடர்ந்து மெட்டா நிறுவன சேவைகளை வழங்க வழிவகுக்க வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மெட்டா நிறுவனம் செய்தி அனுப்பி இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை பொறுத்தவரை, ஜெர்மனி மற்றும் பிரான்சு நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இல்லாத வாழ்க்கை நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஐரோப்பிய கண்டத்தின் தனி நபர் பாதுகாப்பு நெறிமுறைகளில் சமரசம் செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம். இதனால், ஐரோப்பாவில் இருந்து விரைவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்