Mehul Choksi: இந்திய விசாரணை அமைப்புகளின் கோரிக்கை அடிப்படையில், ஜாமின் இல்லாத பிரிவுகளில் மெஹுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெஹுல் சோக்ஸி கைது?
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய வைர வியாபாரியான மெஹுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) உள்ளிட்ட இந்திய விசாரணை அமைப்புகளின் வேண்டுகோளின் பேரில், மும்பை நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, விரைவில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், மெஹுல் சோக்ஸியும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். இதன் மூலம், இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றாலும், தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
ரூ.13,500 கோடி மோசடி
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கும் சோக்ஸி, ஏப்ரல் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, அவரது கைது பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடிக்கு மேல் கடனாக பெற்று மோசடி செய்ததில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது.
சோக்ஸி, அவரது நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மற்றும் பிறர் வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, தேவையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஒப்பந்தக் கடிதங்களை (LoU) மோசடியாகப் பெறவும், வெளிநாட்டு கடன் கடிதங்களை (FLC) மேம்படுத்தவும் முயன்றனர். இது வங்கிக்கு கணிசமான இழப்புகளுக்கு வழிவகுத்தது. இந்த ஊழலில் அவரது மருமகன் நீரவ் மோடியும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்வெர்ப்பில் நகரில் வசிப்பதற்கான அனுமதியை பெற்று மெஹுல் சோக்ஸி வாழ்ந்து வருவதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், அவர் பெல்ஜியத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதனை தொடர்ந்து தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.
சிக்கியது எப்படி?
ஆண்ட்வெர்ப்பில் நகரில் வசிப்பதற்கான அனுமதியை பெற்று மெஹுல் சோக்ஸி வாழ்ந்து வருவதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், அவர் பெல்ஜியத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதனை தொடர்ந்து தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து பேசிய பெல்ஜியத்தின் ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் (FPS) வெளியுறவுத்துறையின் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான செய்தித் தொடர்பாளரும் சேவைத் தலைவருமான டேவிட் ஜோர்டன்ஸ், இந்த வழக்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இது குறிப்பிடத்தக்க கவனத்துடன் கையாளப்படுவதாகவும் கூறினார்.
புற்றுநோய் பாதிப்பா?
இதனிடையே சோக்ஸி சுவிட்சர்லாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் அங்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோக்ஸி பெல்ஜிய அதிகாரிகளிடம் தவறான உறுதி மொழி ஆவணங்களையும் சமர்ப்பித்ததும், தான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் மறைத்துள்ளார். இந்தியா மற்றும் ஆன்டிகுவாவில் தனக்குள்ள குடியுரிமை விவரங்களையும் அவர் மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள சோக்ஸியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான பணிகளை இந்தியா விரைவில் தொடங்க உள்ளது. அவரது மருமகனான நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.