தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிலவும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் அந்நாட்டிற்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவுறுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் ஊடக மையம் வெளியிட்டுள்ள இந்த ஆலோசனையில், இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த எச்சரிக்கைக்கான குறிப்பிட்ட காரணங்களை அமைச்சகம் விரிவாக விளக்கவில்லை.
இந்தியர்களுக்கான வழிகாட்டுதல்கள்
தற்போது வெனிசுலாவில் தங்கியிருக்கும் இந்தியக் குடிமக்களுக்கென பிரத்யேக வழிகாட்டுதல்களையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவர்கள் தங்களின் நடமாட்டத்தை மிகக் குறைவாக வைத்துக் கொள்ளவும், உள்ளூர் நிலவரங்களைக் கூர்ந்து கவனித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. தூதரக உதவிகள் மற்றும் உடனுக்குடனான தகவல்களைப் பெற cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், அவசரக் காலங்களில் தொடர்புகொள்ள +58-424-9848288 என்ற தொலைபேசி எண்ணையும் (வாட்ஸ்அப் வசதியுடன்) அமைச்சகம் வழங்கியுள்ளது.
நிக்கோலஸ் மதுரோ வெளியேற்றமும் அமெரிக்காவின் நடவடிக்கையும்
வெனிசுலாவின் தலைமைப் பொறுப்பில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்நாட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டு, கரீபியன் கடலில் உள்ள USS Iwo Jima என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.க்
கைதுக்கு என்ன காரணம்?
அமெரிக்க அரசின் தகவல்படி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் எலைட் பிரிவான 'டெல்டா ஃபோர்ஸ்' மற்றும் சிஐஏ உளவு அமைப்பின் ரகசியத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வெனிசுலா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அங்கு நிலவும் மிக மோசமான மற்றும் நிச்சயமற்ற சூழல் காரணமாகவே இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.