நியூசிலாந்தின் கெர்மடக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலை கொண்டிருந்தது. முதலில் நிலநடுக்கம்  7.3 ரிக்டர் ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 7.1 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமானது கெர்மடாக் தீவுகளுக்கு விடுத்திருந்த சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. 


இந்த ஆண்டின் மோசமான நிலநடுக்கம்..


துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து நொறுங்கின. தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போது, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


துருக்கியில் நிலநடுக்க ஏற்பட்ட முதல் 36 மணிநேரத்தில் மட்டும் துருக்கியில் 100 க்கு மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்தனர். தென்கிழக்கு துருக்கியில் 4 ரிக்டர் என்ற அளவில் 81 நில அதிர்வுகளும், 5 என்ற ரிக்டர் அளவில் 20 நில அதிர்வுகள் பதிவாகின. மேலும், 6 ரிக்டர் அளவில் மூன்றும், 7 ரிக்டர் அளவில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகின. துருக்கி நிலநடுக்கத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:


நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது.


கடந்த 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. அப்போது, டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர்.  அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக,  2011ம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600 க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். 


கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவானது