LinkedIn Layoff : LinkedIn நிறுவனத்தில் 700 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.


அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா போன்ற பெருநிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பிரபல சமூக வலைத்தள LinkedIn நிறுவனமும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


700 ஊழியர்கள் பணிநீக்கம்


மைக்ரோசாப்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் LinkedIn நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற வருகின்றனர். இந்த  LinkedIn சமூக வலைதளத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் வேலை தேடுபவர்கள் இந்த சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். பெரு நிறுவனங்கள் இல்லாமல் சிறு நிறுவனங்ளின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை இந்த  LinkedIn சமூக வலைதளத்தில் வெளியாகும். 


இந்நிலையில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், தற்போது இந்த நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கிட்டதட்ட 35 சதவீத பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது.  


இந்த முறை விற்பனை, நிர்வாகம், சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது. இதில் பணியமர்த்தும் குழுவை சேர்ந்தவர்களை அதிகளவில் பணியில் இருந்து நீக்கியது. குறிப்பாக LinkedIn நிறுவனத்தின் சீன வேலைவாய்ப்பு தளத்தை அந்நிறுவனம் முற்றிலுமாக மூடிவிட்டது.


தொடரும் பணிநீக்கங்கள்


இதேபோன்று அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி மேலும் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது.  ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.


மேலும், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சில தினங்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று  ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, விரைவில் உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10,000  பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமானது ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், 11 ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Raj Bhavan Guest House: ஏழை மாணவிக்காகத் திறக்கப்பட்ட விவிஐபிகளுக்கான ஆளுநர் விருந்தினர் மாளிகை: அதிசயத்தின் பின்னணி என்ன?