13 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு தனது மக்களை அனுப்பும் பணியை மீண்டும் தொடங்கியுள்ள ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA), பிப்ரவரி 28 அன்று, விண்வெளிக்கு பயணிக்க இருக்கும் இரண்டு பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


அதன் அடிப்படையில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு காலநிலை விஞ்ஞானி ஆகிய இருவரும் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளார்கள். 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை அடுத்து இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


விண்வெளிக்குப் பயணிக்க உள்ளவர்களில் அயு யொனேடா 28 வயதாகும் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் விண்வெளி பயிற்சி திட்டத்தில் சேரும் மூன்றாவது பெண் ஆவார். இவர் டோக்கியோவின் ஜப்பானிய செஞ்சிலுவை மருத்துவ மையத்தில் பணிபுரிகிறார். தற்போது, ஜப்பானில் ஆறு விண்வெளி வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பயிற்சி முடிந்து விண்வெளிக்கு செல்லும் தகுதி பெறும் நிலையில் அயு யொனேடா விண்வெளிக்குச் செல்லும் முதல் பெண்ணாக இருப்பார். ஜப்பானிய விண்வெளி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு விண்வெளி வீரர் மாகோடோ சுவா. இவர் உலக வங்கியில் மூத்த பேரிடர் இடர் மேலாண்மை நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 46.இவர் இதற்கு முன்னர் ஒருமுறை தனது விண்ணப்பத்தை அனுப்பி அது தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அவர் அது குறித்து தான் உற்சாகமும் ஆச்சரியமும் அடைந்ததாகவும்,பொறுப்பு மற்றும் பணி உணர்வை உணர்ந்ததாகவும் யோனேடா கூறினார். தன்னால் பேச முடியாத அளவுக்கு உற்சாகமாக இருப்பதாக மாகோடோ சுவா கூறினார்.




தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து யோனேடா மற்றும் சுவா இருவரும் தங்களது இரண்டு வருட பயிற்சி திட்டத்தை தொடங்குவார்கள். அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் சேரலாம் மற்றும் சந்திரனுக்கு அனுப்பப்படலாம். அவர்கள் சந்திரனுக்கு அனுப்பப்பட்டால், சந்திர மேற்பரப்பில் கால் பதிக்கும் முதல் ஜப்பானிய விண்வெளி வீரர்கள் என்ற பெருமையைப் பெறுவார்கள்.


மே 2022 இல், ஜப்பானும் அமெரிக்காவும் முதல் ஜப்பானிய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்தன.முன்னதாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் சந்திரனில் தாங்கள் கால் பதிப்போம் என நம்புவதாக ஜப்பான் கூறியிருந்தது.


தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்வெளி வீரர்களாக என்ன செய்ய இருக்கிறார்கள்?


சுவா பழங்கால காலநிலையில் நிபுணத்துவம் பெற்றவர், மேலும் செவ்வாய் கிரகத்தின் காலநிலை எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி அறிய விரும்புகிறார். அவரது அறிக்கையின்படி, சந்திரனைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம், செவ்வாய் கிரகத்தைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம், மனிதர்கள் கிரகங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றார்.


ஜப்பானின் முதல் பெண் விண்வெளி வீரரான சியாகி முகாய், அறுவை சிகிச்சை நிபுணராக இருந்ததைப் பற்றிய மங்கா காமிக்ஸைப் படித்த பிறகு யோனேடா தான் ஒரு விண்வெளி வீரராக ஆவதற்கு உத்வேகம் பெற்றதாகக் கூறினார்.


JAXA தலைவர் ஹிரோஷி யமகாவா கூறுகையில், விண்வெளித் திட்டங்களை பொதுமக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரக்கூடிய விண்வெளி வீரர்களைக் கண்டுபிடிப்பதை விண்வெளி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் ஒரு சுற்று ஆள் சேர்ப்பு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.