ஜப்பானின் புதிய மீடியம்-லிஃப்ட் ராக்கெட் நேற்று முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டாலும் அதன் லாஞ்சரின் இரண்டாம்-நிலை இயந்திரம் திட்டமிட்டபடி இயங்காததால் தோல்வியடைந்ததாக கூறுகின்றனர்.
செயல்படாத எஞ்சின்:
விண்வெளி ஆய்வுகளை அணுகுவதற்கான செலவைக் குறைத்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்க்கு எதிராக போட்டியிடும் முயற்சியில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 57-மீட்டர் (187 அடி) உயரமுள்ள எச்3 ராக்கெட் தனேகாஷிமா விண்வெளித் துறைமுகத்தில் இருந்து எந்தத் தடையும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில், ராக்கெட்டின் இரண்டாம் கட்ட எஞ்சின் செயல்பட தொடங்கவில்லை, இதனால் மிஷன் அதிகாரிகள் அந்த ராக்கெட்டை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"ராக்கெட்டின் இரண்டாம் கட்டம் செயல்படாததால், அதனை அழிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. நடந்தது என்ன என்பது குறித்து தரவுகளை வைத்து கண்டறிய வேண்டும்” என ஜாக்ஸாவின் வெளியீட்டு ஒளிபரப்பு வர்ணனையாளர் கூறினார். " இதற்கு முன் பல முறை இதனை ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் இந்த முறை விண்ணில் ஏவப்பட்டு அது முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது.
இது ஜப்பானின் எதிர்கால விண்வெளி கொள்கை, விண்வெளி வணிகம் மற்றும் தொழில்நுட்ப போட்டித்திறன் ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என ஒசாகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோடகா வதனாபே கூறினார். ஜப்பானின் இந்த ராக்கெட் ALOS-3 செயற்கைக்கோளை சுமந்து சென்றது. இந்த செயற்கைக்கோள் பேரழிவு மேலாண்மை, நில கண்காணிப்பு, வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்டறிய ஒரு infrared சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
சந்திரயான் 3
இதற்கிடையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டுக்குள் சந்திரயான் - 3 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. சந்திரயான் -3 ஏவுகணையின் இரண்டாம் கட்டம் சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக கடந்த வாரம் அறிவித்துள்ளது. சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை பிப்ரவரி 28ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மகேந்திரகிரியின் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முதலில் சந்திரயான் 3ன் முதல் கட்ட சோதனை பெங்களூருவில் செயல்படுத்தப்பட்டது. சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன்பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவு வரை கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி, நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சோதனைகள் அனைத்தும் முடித்தபின் இந்தாண்டு இறுதிக்குள் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.