இஸ்ரேல் ராணுவம், இன்று ஏமனின் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் ராணுவ உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாசுக்கு ஆதரவளித்துவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

இஸ்ரேலின் குற்றச்சாட்டு என்ன.? எதற்காக தாக்குதல்.?

இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் ஈரானிய ஆயுதங்களை கொண்டு செல்ல, ஹவுதிக்கள்ஹொடைடா துறைமுகத்தை பயன்படத்துவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணை ஏவுதல் உள்ளிட்ட ஹவுதி ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இஸ்ரேலை குறிவைத்து, வணிக மற்றும் அவ்வழியாக கடந்து செல்லும் கப்பல்களுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கடல் வழிகளை பயன்படுத்த ஹவுதிக்கள் ஈரானின் வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவியின் கீழ் செயல்படுவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும், தூரத்தை பொருட்படுத்தாமல் தாக்குதற்கு ராணுவம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுதிக்கள் செய்துவருவது என்ன.?

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஆண்டுக்கணக்கில் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போரில் 64,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான இந்த போரில், ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு, ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப்படை எச்சரிக்கை

இந்த நிலையில் தான், இன்று ஹவுதி ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதோடு நிறுத்தாமல், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.