அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதைத் தொடர்ந்து, அரபு நாடுகள் ஈரானுக்கு எதிரான போரில் தங்களுடன் இணைய விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், போர் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் இன்னும் கூடுதலாக்கும். இது குறித்து ட்ரம்ப் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

“அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராக போரில் இணைய விரும்புகின்றன“

ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவிற்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கைகளில் இணைய அரபு நாடுகள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டி வந்தன. ஆனால், எதிர்பாராத விதமாக, ஈரான் அரபு நாடுகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தியதால், அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் தாங்களும் இணைய விரும்புவதாக அரபு நாடுகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப், பல அரபு நாடுகள் ஈரானுடைய தாக்குதல்களுக்கு உள்ளானதால், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து ஆச்சர்யப்பட்டதாகவும் கூறிய அவர், இப்போது அரபு நாடுகளும் தங்களுடன் இணைந்து போராட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகளை ஈரான் தாக்கிய ‘ஆச்சர்யம்‘

கடந்த வார இறுதியில், ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்திய விலையில், அந்நாடும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. ஈரான் டெல் அவிவ் நோக்கியும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, அந்தத் தாக்குதல்கள் நடந்த முதல் நாளிலேயே கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், ஈரான், பஹ்ரைன், ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதும் தாக்குதல்களை நடத்தியது. அந்த நாடுகளைத் தாக்க ஈரான் எடுத்த முடிவை, இதுவரையிலான இந்த போரில் "அநேகமாக மிகப்பெரிய ஆச்சரியம்" என்று ட்ரம்ப் விவரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "அவர்கள் (ஈரான்) ஒரு ஹோட்டலுக்குள்ளும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீதும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அது அவர்களை(அரபு நாடுகள்) கோபப்படுத்தியது. அவர்கள் எங்களை நேசிக்கிறார்கள். ஆனால், நடப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த போரில் ஈடுபடுவதற்கு எந்த காரணமோ, அவசியமோ இல்லை," என்று அவர் கூறினார்.

பெரிய தாக்குதல் இனி தான் நடக்கப் போகிறது

தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், "நாங்கள் அவர்களை தாக்கி வருகிறோம், ஆனால் பெரிய அலை இனிமேல் தான் வரப்போகிறது" என்று கூறினார். மேலுமை, தாக்குதல்கள் மிகவும் நன்றாகப் போகிறது என்று தான் நினைப்பதாகவும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் தெரிவித்தார். அதோடு, உலகின் மிகப்பெரிய ராணுவம் தங்களிடம் உள்ளது என்றும் அதை தாங்கள் பயன்படுத்துவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

“நீண்ட காலம் போர் புரிவதற்கான வலிமை உள்ளது“

இதனிடையே, தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து முதன் முறையாக வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப்,  தாக்குதல்கள் திட்டமிட்ட காலத்தைவிட கணிசமான அளவில் முன்னதாகவே நடைபெற்று வருவதாகவும், அதை வைத்து பார்க்கும் போது, 4-லிருந்து 5 வாரங்கள் இந்த தாக்குதல்கள் தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும், தாக்குதல்களை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீடிக்கும் அளவிற்கு தங்களிடம் திறன் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.