ஹிஸ்புல்லா போராளிக் குழுவிற்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக லெபனானில் 300 இலக்குகளைத் குறிவைத்துக் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு லெபனானை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியதுடன், வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்துவோம் என எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல்-காசா மோதல் தொடங்கியதில் இருந்து லெபனான் மீதான தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் லெபனானில் கடந்த ஏழு நாட்களில் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தகவல் தெரிவிக்கின்றன.


தாக்குதலுக்கு ராணுவம் ஒப்புதல்:


இஸ்ரேல் இராணுவம், X பதிவில் தெரிவித்துள்ளதாவது, " டெல் அவிவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து கூடுதல் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்து, அதன் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. 


"லெபனானில் நாங்கள் எங்கள் தாக்குதல்களை ஆழப்படுத்துகிறோம், வடக்கு குடியிருப்பாளர்களை அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பும் எங்கள் இலக்கை அடையும் வரை நடவடிக்கைகள் தொடரும்" என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant திங்களன்று தனது அலுவலகத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில் தெரிவித்தார்.






இஸ்ரேலிய இராணுவம் லெபனானியர்களை ஹெஸ்பொல்லா தளங்களிலிருந்து 'விலகுமாறு' எச்சரித்தது மற்றும் லெபனானில் மேலும் 'விரிவான, துல்லியமான தாக்குதல்களை' நடத்தப்போவதாக கூறியது. இரு நாடுகளுக்கும் இடையே ஆங்காங்கே நடக்கும் வன்முறைச் சம்பவங்களின் ஒரு வருடத்தில் நடந்த மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதலல் சமீபத்திய தாக்குதல் ஆகும்.


வெளியேறுமாறு எச்சரிக்கை: 


லெபனான் குடிமக்களை வெளியேற்றுமாறு இஸ்ரேல் தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக லெபனான் அதிகாரப்பூர்வ ஊடகத்தை மேற்கோள்காட்டி AFP அறிக்கை தெரிவித்துள்ளது.


ஹலேவி மற்றும் பிற இஸ்ரேலிய தலைவர்கள் வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், சில நாட்களாக இஸ்ரேல் - லெபனான் நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பெரிதாக தலையீடு செய்து மோதலை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வருவதையும் பார்க்க முடிகிறது.