அமெரிக்கா உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காத வகையில், ஈரானிய அதிகாரிகளின் திட்டமிட்ட படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, 18 அமெரிக்க நிறுவனங்களை தாக்கி அழிப்போம் என்று அறிவித்து, தாக்குதலுக்கான நேரத்தையும் கறித்துள்ளது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப்படை. அது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், ஈரானிய அதிகாரிகளின் குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளில், 18 முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் உடந்தையாக இருந்ததாகக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த நிறுவனங்கள் நாளை முதல், அதாவது இன்று முதல் தாக்கி அழிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், இன்று டெஹ்ரான் நேரப்படி இரவு 8.00 மணி முதல், ஈரானில் நடைபெறும் ஒவ்வொரு படுகொலைக்கும் பதிலடியாக, தங்களின் தொடர்புடைய பிரிவுகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் எவை.?

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள தாக்குதல் பட்டியலில்,

  • ஆப்பிள்
  • கூகுள்
  • மெட்டா
  • மைக்ரோசாஃப்ட்
  • ஐபிஎம்
  • இன்டெல்
  • டெல்(Dell)
  • டெஸ்லா
  • போயிங்
  • என்விடியா
  • ஹெச்.பி
  • சிஸ்கோ
  • ஆரக்கிள்
  • பிளான்டர்
  • ஜே.பி. மோர்கன்
  • ஜிஇ ஸ்பையர் சொல்யூஷன்ஸ்
  • ஜி42

ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை

இந்த நிறுவனங்கள் பயங்கரவாத நிறுவனங்கள் என்று ஈரான் பாதுகாப்புப் படை முத்திரை குத்தியுள்ளது.  மேலும், அந்நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பாதுகாப்புப் படை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உடனடியாக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்திற்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, ஈரானை தரைவழியாக தாக்க, மத்திய கிழக்கில்  ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் இந்த மிரட்டலுக்கு என்ன பதிலடி தரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்துவது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்ட ட்ரம்ப், இந்த சூழலை பயன்படுத்தி அந்த தாக்குதலை உடனடியாக தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்படி நடக்கும் பட்சத்தில், இந்த போர் இன்னும் மிகப்பெரியதாக மாறும். அதனால், உலக அளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. போரில் இரு தரப்பிலும் இன்னும் பல நாடுகள் இணைய வாய்ப்புள்ளதால், ஏற்கனவே எச்சரிக்கப்பட்டபடி, இது பிராந்திய அளவிலான போராக மாற வாய்ப்புள்ளது.