ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுள்ள ரஷ்யா, நாளொன்றுக்கு சுமார் 760 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6300 கோடி) வருவாய் ஈட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் வருமானம் இரட்டிப்பு!
கெய்வ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் (KSE) அளித்த தரவுகளை மேற்கோள் காட்டி 'தி டெலிகிராப்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ரஷ்யாவின் மாதாந்திர எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 12 பில்லியன் டாலரில் இருந்து 24 பில்லியன் டாலராக (சுமார் ₹2 லட்சம் கோடி) உயரவுள்ளது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 38% அதிகரித்துள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய்யின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 72% வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு சலுகை கிடையாது?
இதற்கு முன்பு வரை அமெரிக்கத் தடைகள் காரணமாக, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்யா பெரும் தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கி வந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
முன்னதாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை விட 9 டாலர் குறைவாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்தத் தள்ளுபடி முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. சில நேரங்களில் சர்வதேச விலையை விட கூடுதல் விலைக்கு (Premium Price) இந்தியாவுக்கு எண்ணெய் விற்கப்படுவதாகப் பொருளாதார நிபுணர் போரிஸ் டோடோனோவ் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு வழங்கப்பட்டு வந்த 15 டாலர் தள்ளுபடி, தற்போது 7 டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. "தற்போது சர்வதேச எண்ணெய் சந்தை மிகவும் வினோதமாகச் செயல்பட்டு வருகிறது" என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குவியும் பணம்.. புதின் போட்ட அதிரடி உத்தரவு!
இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் எரிசக்தி வருவாய் 218.5 பில்லியன் டாலரை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போர் இன்னும் 6 மாதங்களுக்கு நீடித்தால், இந்த வருமானம் 386.5 பில்லியன் டாலராக எகிறும்.
இந்த அதிரடி வருவாய் குறித்து கிரெம்ளினில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், எண்ணெய் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். "கிடைக்கும் உபரி வருமானத்தைக் கொண்டு நிறுவனங்கள் தங்கள் கடன்களை அடைக்க வேண்டும். உள்நாட்டு வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதே முதிர்ச்சியான முடிவாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ரஷ்யா மட்டும் பெரும் லாபத்தை ஈட்டி வருவது உலக நாடுகளிடையே பேசுபொருளாகியுள்ளது.
