Iran India Ships Gas Shortage: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய கப்பல்களுக்கு, ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை  ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புஷ்பக் மற்றும் பரிமல் எனும் இரண்டு எண்ணெய் கப்பல்கள், ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் அந்த எல்லையை கடந்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், தாய்லாந்து கப்பலுடன் வந்த கப்பலை, ஈரான் ராணுவம் தாக்கியுள்ளது.

விரைவில் இயல்பு நிலை?

போர் பதற்றம் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள், கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு கிடைத்த அனுமதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக சவூதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற லைபீரியக் கொடியுடன் கூடிய ஒரு டேங்கர் கப்பல், இந்தியர் ஒருவரின் தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடல் போக்குவரத்து வியத்தகு முறையில் குறைந்த பிறகு, நீர்வழியில் பாதுகாப்பாக பயணித்த இந்தியாவிற்கான முதல் கப்பலாக இந்தக் கப்பல் மாறியது. இந்திய கப்பல்களுக்கு தற்போது கிடைத்துள்ள அனுமதியால், உள்நாட்டில் நிலவும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் சீரடையும் என கூறப்படுகிறது.

ஈரான் எச்சரிக்கை

வளைகுடா நாட்டில் நிலவி வரும் பதற்றத்தை தொடர்ந்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவின் தளபதி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்கள் ஈரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எச்சரிக்கை வெளியிட்டது.  அனுமதியின்றி பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் ஈரானியப் படைகளால் குறிவைக்கப்படும் அபாயம் உள்ளது.

12வது நாளை எட்டிய போர்

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை தற்போது 12வது நாளை எட்டியுள்ளது.பதற்றம் தணிவதற்கான உடனடி அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இந்த மோதல் பிராந்தியத்தில் கடல் போக்குவரத்தை வெகுவாகக் குறைத்து, உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச கப்பல் பாதைகள் குறித்த கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீதான கட்டுப்பாடுகளை தெஹ்ரான் கடுமையாக்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் நலன்களுக்கு உதவாத கப்பல்கள் பாதுகாப்பான முறையில் வழியனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.