US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
தற்காப்பு என்று கூறி ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளதால், மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் ஏழுந்துள்ளது.

ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளம் மீதும், கடலில் இருந்த சில படகுகள் மீதும் அமெதிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்பிற்காக நடத்தப்பட்டது என்று அமெரிக்க ராணுவம் கூறியிருந்தது. ஆனால், அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்தி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்புல்லா மீது இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், மீண்டும் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த நடைபெற்றுவரும் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்களையும், கண்ணிவெடிகளை புதைக்க முயன்றதாகக் கூறப்படும் படகுகளையும் குறிவைத்து ‘தற்காப்புத் தாக்குதல்‘களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் நேற்று தெரிவித்தது. ஈரானிய படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்க பணியாளர்களை பாதுகாப்பதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு விளக்கமளித்தது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நமது துருப்புக்களை பாதுகாப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன," என்று மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரும், கடற்படை கேப்டனுமான டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்திருந்தார். ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அமெரிக்கா தொடர்ந்து நிதானத்தை கடைப்பிடித்து வருவதாக ஹாக்கின்ஸ் கூறினார்.
ஈரானின் பதிலடி தாக்குதல்
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் MQ-9 ட்ரோன் மற்றும் உலகிலேயே சக்திவாய்ந்ததாக கருதப்படும் F-35 போர் விமானம், RQ-4 ட்ரோன் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் எடை தெரிவித்துள்ளது.
அதோடு, அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை போர் நிறுத்தத்தை மீறும் செயல் எனவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளதோடு, பதிலடி தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஹெஸ்பொல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்
இதனிடையே, லெபனானில் இருந்து ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ஹெஸ்பொல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது போர்நிறுத்தத்தை மீறிய செயலாகும்.
ஏனெனில், அமெரிக்க அதிபர் அறிவித்த போர்நிறுத்த விதிகளில், லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என்ற அம்சமும் உள்ளது. ஆனால், அதை மீறியே இஸ்ரேல் தற்போது செயல்பட்டு வருகிறது.
பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன
இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக, மேற்காசிய நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்காக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி உள்ளிட்டோர் தோஹா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் போர் வெடிக்குமா.?
ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இரு தரப்பும் தற்போது மீண்டும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தியுள்ளதால், மீண்டும் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
இதனால், கச்சா எண்ணெயின் விலையும் உயர்ந்துவருகிறது. ஏற்கனவே, இதனால் ஏராளமான உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் போர் வெடித்தால், எரிபொருளுக்கு உச்சகட்ட தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: “யுரேனியத்த ஒப்படைங்க, இல்லைன்னா அழிச்சுடுங்க“; ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்
ட்ரெண்டிங் செய்திகள்





















