Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Iran Warns Trump: ஈரானின் மின்சார கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மொத்த வளைகுடா நாடுகளும் நரகமாக மாற்றப்படும் என தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Iran Warns Trump: ஹார்மஸ் நீர்வழிப்பாதையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் நரகத்தை காட்டுவோம் என்ற, ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது.
ட்ரம்புக்கு பதிலடி தந்த ஈரான்
ஹார்மஸ் நீர்வழிப்பாதையை அடுத்த 48 மணி நேரத்தில் திறக்கவிட்டால், ஈரானின் மின்சார கட்டமைப்புகளை தாக்கி, அவர்களுக்கு நரகத்தை காட்டுவேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். கடந்த 26ம் தேதி தான் வழங்கிய 10 நாட்கள் கெடு முடிவடையை இரண்டு நாட்களே உள்ளதால், இரண்டு நாட்களுக்குள் ஹார்மஸ் நீர்வழிப்பாதையை திறக்காவிட்டால் மோசமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தியுள்ளார். அப்படி தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக, மொத்த வளைகுடா நாடுகளையும் நரகமாக மாற்றுவோம் என ஈரான் பதிலடி தந்துள்ளது.
”மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்”
அமெரிக்கா தனது தாக்குதலை விரிவுபடுத்தினால் மத்திய கிழக்கில் நிலைமை வேகமாக மோசமடையுமென ஈரானின் புரட்சிகர இஸ்லாமிய பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. அந்நாட்டின் ராணுவ மத்திய தலைமையகத்தின் செய்தி தொடர்பாளரான இப்ராஹிம் ஸோல்ஃபகாரி பேசுகையில், “பதற்றங்கள் நீடித்தால் இந்த பகுதியே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நரகமாகிவிடும். ஈரானை தோற்கடித்துவிட்டோம் என்ற அவர்களது மாயை அவர்களையே சகதியில் சிக்க வைத்துவிடும்” என எச்சரித்துள்ளார். மேலும், ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைகள் என்பது அமெரிக்காவின் கையறு நிலை, பதற்றம், நிலையற்ற தன்மை மற்றும் முட்டாள் தனமான செயல்களையே வெளிப்படுத்துகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால் அவர்களுக்காக நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பதே இங்கு சேதி” எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்..
இதனிடையே, தீவிரமான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் தரப்பில் இருந்து சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாகவும், அமெரிக்காவின் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருப்பதகாவும் கூறப்படுகிறது. ஹார்மஸ் திறக்கப்பட வேண்டும், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது போன்ற தங்களது திட்டங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா மீண்டும் மீண்டும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருதலைபட்சமான பரிந்துரைகளை ஏற்கப்போவதில்லை என ஈரானும் திட்டவட்டமாக கூறி வருவதால், 48 மணி நேரத்திற்கு பிறகு என்ன நடக்குமோ? என வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன. அதேநேரம், அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தக்கூடிய எந்தவொரு தாக்குதலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் இஸ்ரேல் உட்கட்டமைப்புகள் மீது, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மற்றும் தொடர்ச்சியான பதிலடி தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என ஈரான் உறுதிபட தெரிவித்துள்ளது.
பிரச்னைக்கு காரணமாக திகழும் ஹார்மஸ்
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதலின் மையப்புள்ளியாக, ஹார்மஸ் நீர்வழிப்பாதை உருவெடுத்துள்ளது. இந்த வழித்தடமானது உலகின் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் சுமார் 20 சதவிகித பங்களிப்பை கொண்டுள்ளது. தங்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இந்த வழித்தடத்தை ஈரான் மூடியுள்ளது. மனிதநேய அடிப்படையில் ஒரு சில கப்பல்கள் அனுமதிக்கப்பட்டாலும், முழுமையான விநியோகம் இல்லாதது சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க & இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இந்த ராணுவ மோதல்களானது ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது.
























