Iran US War Tensions: போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான 18 முக்கிய தளங்களை தாக்கியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள பல முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கியதாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்ததோடு, அனைத்து கப்பல்களும் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குவைத், பஹ்ரைனில் 18 இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் மற்றும் அகமது அல்-ஜாபர் விமானத் தளங்கள், பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானத் தளம் உள்ளிட்ட 18 முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்ததாக ஐ.ஆர்.ஜி.சி. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஈரானிய ராணுவத்தின் கூற்றுப்படி, ஈரானுக்குள் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
இதனிடையே, தொடர்ந்து இரண்டாவது நாளாக, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஈரானுக்குள் உள்ள பல இடங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களை "தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்" என அமெரிக்கா கூறுகிறது. ஈரானிய ஊடகங்களின் தகவல்களின்படி, இந்த தாக்குதல்களின் போது, நாட்டின் தென்பகுதிகளிலும், மேற்கு டெஹ்ரானிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. பல பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுவதும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் பெரும் பகுதி கடந்து செல்வதுமான ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவதாக ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமை அறிவித்தது. அனைத்து கப்பல்களும் அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு ஈரான் எச்சரித்தது.
மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு கப்பல்களை, தங்கள் படைகள் குறிவைத்ததாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியது. இதற்கு பதிலடியாக, அதன் வான்வெளி மற்றும் கடற்படைப் பிரிவுகள் இரண்டு கட்டங்களாக, அமெரிக்க படைகள் தங்கியிருந்த ராணுவத் தளங்களைத் தாக்கின.
“ஹார்முஸ் பகுதியை நரகமாக மாற்றுவோம்“
ஐ.ஆர்.ஜி.சி-யின் வான்வெளிப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் மூசாவி, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஸ்னிம் என்ற ஈரானிய செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பற்றதாக மாற்ற முயன்றால், ஈரான் அந்த முழு பிராந்தியத்தையும் அவர்களுக்காக நரகமாக மாற்றிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "புனிதமான ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பற்றதாக மாற்றுகிறீர்களா.? ஈரான் முழுவதிலிருந்தும் இந்த பிராந்தியத்தை உங்களுக்காக நரகமாக மாற்றுவோம்" என்று மூசாவி கூறினார். அதோடு, "இந்த பிராந்தியத்தில் அமெரிக்கர்களின் இந்த துணிச்சலான செயலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மேலும், ஹார்முஸ் மீண்டும் முடக்கப்பட்டதால், உலகலாவிய எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது, உலக நாடுகளிடையே கவலையை மேலும் அதிகரித்துள்ளது. ட்ரம்ப்பும் பதிலடி எச்சரிக்கைகளை விடுத்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பெரிய அளவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















