அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், அமெரிக்கா நடத்திய பாலம் மீதான தாக்குதலுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஈரானின் மிகப்பெரிய பாலம் தாக்கி உருக்குலைக்கப்பட்ட நிலையில், அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்ட ட்ரம்ப், ஈரானுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால், ஈரானோ, எற்கனவே பதில் தாக்குதலை தொடங்கிவிட்டது. அது தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், வளைகுடா பகுதிகளில் உள்ள 8 பாலங்களை தாக்கப் போவதாக அறிவித்த ஈரான், அதற்கான பட்டியலையும் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவால் தகர்க்கப்பட்ட ஈரானின் மிகப் பெரிய பாலம்
ஈரானின் மிகப் பெரிய பாலம் நேற்று தாக்கி அழிக்கப்படும் வீடியோவை ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டார் ட்ரம்ப். அந்த பதிவில், “மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் ஈரனின் மிகப் பெரிய பாலம் இடிந்து விழுகிறது. இதேபோல் இன்னும் நிறைய தொடரும். காலம் கடந்து, ஒரு மாபெரும் நாடாக உருவெடுப்பதற்கு இனி எதுவும் மிச்சமில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன், ஒரு ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.“ என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
பதிலடியை தொடங்கிய ஈரான்
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை ஏற்கனவே நடத்தியுள்ளது. இன்று அதிகாலை, டெல் அவிவ் நகரை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள், 9 இடங்களை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு ரயில் நிலையம் மற்றும் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
வளைகுடாவில் 8 பாலங்களை தகர்க்கப் போவதாக அறிவித்துள்ள ஈரான்
இப்படிப்பட்ட சூழலில், தங்களுடைய முக்கியமான பாலம் சேதப்படுத்தப்பட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரான் வெளியிட்ட அந்த பட்டியலில், குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலமும் இடம்பெற்றுள்ளது.
இவைகளோடு, சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே, ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகியவையும் ஈரானின் டார்கெட் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதனால், மத்திய கிழக்கில் தற்போது உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
