Khamenei Vs Trump: டக்கர் அடிக்கும் ட்ரம்ப்; டஃப் கொடுக்கும் காமெனி; அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் நிபந்தனை
ஈரானை அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளச் செய்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ எச்சரிக்கைகளை விடுத்துப் பார்த்தார். ஆனால் எதற்கும் அசையாத காமேனி அரசு, தற்போது ஒரு நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானை வற்புறுத்தி வருகிறார் ட்ரம்ப். ஆனால், இதுவை காமேனி அரசு பிடி கொடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் எவ்வளோ எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், அதற்கெற்றலாம் அசராத காமேனி அரசு, தற்போது அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசிகளும் தொடர்ந்து உயர்ந்ததால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டத்தை அரசு ராணுவப் படையை கொண்டு அடக்க முயன்றதால், அது கலவரமாக மாறியது. அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக பேசிய ட்ரம்ப், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தொடர்ந்து போராடுமாறும் வலியுறுத்தினார். மறுபுறம், காமேனி அரசுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார். அங்கு அப்பாவி மக்களை கொன்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும் என்று ஈரானுக்கு அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து, பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த சூழலில், சமீபத்தில் இஸ்ரேல் பிரமர் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், அப்படி செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்ப இருப்பதாகவும் கூறி பீதியை கிளப்பியதோடு, உண்மையாகவே மற்றொரு பிரமாண்ட போர்க்கப்பல் வளைகுடா பகுதிக்கு ஏற்கனவே சென்றுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் அரசு நிபந்தனை
இத்தகைய சூழலில் தான், தற்போது அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் அரசு அமெரிக்காவிற்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க முன்வந்தால், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தேவையான சமரசங்களை பரிசீலிக்க தயாரா உள்ளோம் என்று, ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி கூறியுள்ளார்.
ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பாக பேச அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் அதன் பின்னர் அணுசக்தி ஒப்பந்தம் எட்டுவது குறித்து பேச ஈரான் தயாராக உள்ளது என்றும் மஜித் கூறயுள்ளார்.
ஓமனில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், மஜித் வெளியிட்டுள்ள நிபந்தனைக்கு, ட்ரம்ப் வார்த்தைகளால் பதிலளிப்பாரா அல்லது ஏவுகணைகளால் பதிலளிப்பாரா என்பது இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.























