மத்திய கிழக்கில் தீவிரம் குறையாமல் போர் தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே ட்ரம்ப்பிற்கு எதிராக போராடிவரும் அமெரிக்க மக்களுக்கு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த போர் அமெரிக்காவிற்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு ஏற்புடையதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த போர் ‘அமெரிக்கா முதலில்‘ என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் செயல் தானா.?“
போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு திரிபுகளுக்கும், தயாரிக்கப்பட்ட கதைகளுக்கும் மத்தியில், உண்மைக்காக குரல் கொடுத்துவரும் அமெரிக்க மக்களுக்காக இந்த கடிதத்தை எழுதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித வரலாற்றிலேயே மிகப் பழமையான நாகரீகத்திலிருந்து தொடர்ந்துவரும் ஈரான், தனக்கென ஒரு அடையாளம் இருக்கும் போதிலும், எந்தவித ஆதிக்கத்தையோ, ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பாதையையோ தேர்ந்தெடுத்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், தங்கள் மீது ஆக்கிரமிப்புகள், சர்வதேச அழுத்தங்கள் பல இருந்தபோதிலும், அண்டை நாடுகளை விட சிறந்த ராணுவ பலத்தை கொண்டிருக்கும் போதிலும், ஈரான் எப்போதும் போரை ஏற்படுத்தியதில்லை என்று பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அதோடு, உலக அரங்கில், பொருளாதாரத்திலும், ராணுவ பலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் நாடாக காட்டிக்கொள்வதற்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும், உண்மைக்கு புறம்பாக ஈரானால் அச்சுறுத்தல் உள்ளது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதை வைத்தே, ஈரான் எந்தவித போரையும் தொடுக்காத நிலையில், தங்களை சுற்றி அமெரிக்கா மிகப்பெரும் ராணுவ தளங்களையும், தளவாடங்களையும் குவித்து வைத்துள்ளதாக பெஷேஷ்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ள அவர், தற்போது இருக்கும் அமெரிக்க அரசிற்கு, உண்மையிலேயே அமெரிக்கா முதலில் என்பதற்கான முன்னுரிமை இருக்கிறதா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
“இஸ்ரேலின் தூண்டுதலால் அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது“
தொடர்ந்து, இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தாங்கள் செய்யும் குற்றங்களை சர்வதேச கண்களில் இருந்து மறைப்பதற்காக, ஈரானால் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி, உலகத்தின் பார்வையை திசைதிருப்பி, அமெரிக்காவையும் தூண்டிவிட்டு இந்த போரில் ஈடுபட வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஈரான் அதிப பெஷேஷ்கியன்.
மேலும், ஈரானில் படித்துவிட்டு, பல நாடுகளில் குடியேறி, அங்குள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் பாடங்கள் நடத்தி, ஆராய்ச்சியிலும் ஈடுபடுவதும், மேற்கே பல உயர்தரமான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிவரும் ஈரானியர்களை பார்த்து, தற்போது ஈரான் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிம்பம் சரியானதுதானா என்பதை யோசிக்குமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இறுதியாக, தற்போதைய இந்த மோதலால் எதிர்கால தலைமுறையினர் தான் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஈரானின் பெருமைமிகு வரலாற்றின்படி, பல்வேறு எதிரிகளை ஈரான் முறியடித்து, வரலாற்றிலிருந்தே அழித்துள்ளதாவும், ஈரான் எப்போதும் கண்ணியத்துடனும், அதே சமயம் தகுந்த எதிர்வினையோடும், பெருமைமிகு நாடாக விளங்குவதாக தெரிவித்துள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன்.
பழிக்குப் பழி.?
ஏற்கனவே அமெரிக்க மக்கள் ட்ரம்ப்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்ற பெஷேஷ்கியனின் இந்த கடிதம், அமெரிக்க மக்களிடம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி, போரை முடிவுக்கு கொண்டுவர உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே சமயத்தில், முன்பு ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடியபோது, அவர்களை தூண்டிவிடும் விதமாக ட்ரம்ப் பதிவுகளை போட்டார். அதற்கு பழிக்குப் பழியாகக் கூட இந்த கடிதத்தை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், பெஷேஷ்கியன் நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவே தோன்றுகிறது.
