ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த போரை ஈரான் தொடங்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பெஷேஷ்கியனின் கூற்றுப்படி, ஈரானின் எதிரிகள் ராணுவ அழுத்தம் மூலம் ஈரானை பலவீனப்படுத்த முயன்றனர், ஆனால் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதில் தோல்வியடைந்தனர். கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், ஈரான் இன்றும் ஒரு வலிமையான நாடாக திகழ்கிறது என்றும், எதிர்காலத்திலும் தொடர்ந்து வலிமை பெறும் என்றும் அவர் கூறினார்.

Continues below advertisement

ஈரானிய அரசு தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில், பெஷேஷ்கியன் இந்த பிரச்னைகள் குறித்து விரிவாக பேசினார். அந்த நேர்காணலின் போது, ​​இஸ்லாமியர்கள் ஒன்றுபடும்போது, ​​வெளி சக்திகளின் சதிகளையும் சவால்களையும் அவர்களால் இன்னும் வலிமையாக எதிர்கொள்ள முடியும் என்று கூறி, முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“போருக்கு முன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினோம்“

மோதலை ஈரான் தொடங்கவில்லை என்று பெஷேஷ்கியன் கூறினார். போர் தொடங்குவதற்கு முன்பு, தனது அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த சர்ச்சையை தீர்க்க முயன்றதாகவும், ஆனால் நிலைமை படிப்படியாக போரை நோக்கி மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவ அழுத்தம் மற்றும் நாட்டிற்குள் மோசமடைந்து வரும் சூழ்நிலையின் கீழ், ஈரான் சிதைந்துவிடும் என்று தனது எதிரிகள் நம்பியதாக அவர் கூறினார். இருப்பினும், அது நடக்கவில்லை. ஈரான் தொடர்ந்து வலுவாக முன்னேறி, எதிர்காலத்தில் மேலும் வலிமையாக வெளிப்படும் என்று அதிபர் குறிப்பிட்டார்.

Continues below advertisement

“48 மணி நேரத்தில் ஈரானை கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது“

சிரியாவில் நடந்ததைப் போலவே, தனது எதிரிகள் 48 மணி நேரத்திற்குள் ஈரானை முழுமையாக கைப்பற்றத் திட்டமிட்டிருந்ததாக பெஷேஷ்கியன் கூறினார். ஈரான் தனது வலிமையையும் திறன்களையும் வெளிப்படுத்தி, அந்த திட்டத்தை முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, ஈரானை எளிதில் பலவீனப்படுத்தவோ அல்லது நிலை குலையச் செய்யவோ முடியாது என்பதை தற்போதைய நிலைமை நிரூபித்துள்ளது.

மொஜ்தபா கமேனி குறித்து பேசிய பெஷேஷ்கியன்

பெஷேஷ்கியன் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி குறித்தும் பேசினார். கமெனியுடன் தொடர்புகொள்வது இப்போது மிகவும் கடினமாக உள்ளது என்று அவர் கூறினார். இருப்பினும், அவரது இருப்பை ஈரானின் மிகப்பெரிய பலம் என்று அவர் விவரித்தார். உச்ச தலைவரானதிலிருந்து, மொஜ்தபா கமெனி பொதுவெளியில் அரிதாகவே தோன்றியுள்ளார். பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கவலைகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

எனினும், மொஜ்தபா கமெனியின் அரிதான பொதுத் தோற்றங்கள், பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. இந்த சூழலில், அவரது இருப்பு ஈரானுக்கு மிகவும் முக்கியமானது என்று பெஷேஷ்கியன் விவரித்தார்.

“அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை தொடங்கின“

போரைத் தொடங்கியதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பெஷேஷ்கியன் நேரடியாக குற்றம் சாட்டினார். பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்க்க ஈரான் முயன்று வருவதாகவும், ஆனால் மறுதரப்பு தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். ஈரான் போரை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை காண முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அப்படியிருந்தும், மோதல் தொடர்ந்து தீவிரமடையும் வகையிலான சூழ்நிலைகள் உருவாகின.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பதற்றத்தை அதிகரிப்பதாக பெஷெஷ்கியன் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் கூறினார். மேலும், சில ஆயுதங்களின் விநியோகத்தில் அமெரிக்க ராணுவம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டது கவனிக்கப்பட வேண்டியது.