ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டடார். எனினும், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கமேனி கொல்லப்பட்டதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் சூளுரைத்துள்ளார். இது குறித்து அவர் என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.
சூளுரைத்த ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன்
அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஈரானிற்கு அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தாக்குதலில் கொல்லப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கமேனி கொலைக்கு பழிவாங்குவோம் எனவும், கமேனியை கொன்ற குற்றத்திற்கு கொடூரமான பதிலடி கிடைக்கும் எனவும் ஈரான் தெரிவித்தது. அதோடு, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி தராமல் ஓயமாட்டோம் என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் சூளுரைத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், கமேனியை படுகொலை செய்தது இஸ்லாமியர்களுக்கு எதிரான வெளிப்படையான போர் என்று கூறியுள்ளார்.
மேலும் இதற்கு, அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் உரிய பதிலடி தராமல் ஓய மாட்டோம் எனவும், இந்த குற்றத்தை செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி தருவோம் எனவும் கூறியுள்ளார். அதோடு, இது, இஸ்லாமிய நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்
இதனிடையே, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வாறு செய்தால், அந்நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பது ஈரானின் கணக்கு. அதே நேரத்தில், இஸ்ரேல் தலைநகர் ஜெரசலேம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், ஈரான் அதிபர் சூளுரைத்துள்ளதைப் பார்க்கும் போது, இந்த போர் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. ஈரானிடம் ஏராளமான ஆயுதங்கள் இருப்பது ஏற்கனவே அந்நாடு வெளியிட்ட வீடியோக்கள் மூலம் தெரிந்தது. ஈரான் அதிபர், பழிவாங்குவதற்காக முழு பலத்தையும் பிரயோகிப்போம் என்று வேறு கூறியுள்ளார். இதனால், இந்த போர் மேலும் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
