அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், பரபரப்பான சம்பவங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இஸ்ரேல் - லெபனான் இடையே பேர்நிறுத்தம் எற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வணிக கப்பல்களும் செல்லலாம் என்று ஈரான் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வழக்கம்போல் தனது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட ட்ரம்ப், பல்வேறு விஷயங்களை கூறினார். ஆனால், அதனை மறுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், ட்ரம்ப்பின் ஒவ்வொரு கூற்றிற்கும் பதிலளிக்கும் விதமாக, தனது சமூக வலைதளத்தில் பாய்ண்ட் பாய்ண்ட்டாக பதிவிட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

காலிபாஃபின் பதிவு கூறுவது என்ன.?

இது குறித்த தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காலிபாஃப்,

  1. அமெரிக்க அதிபர் ஒரு மணி நேரத்தில் ஏழு கூற்றுக்களை முன்வைத்தார், அந்த ஏழுமே பொய்யானவை.
  2. இந்த பொய்களால் அவர்கள் போரில் வெற்றி பெறவில்லை, பேச்சுவார்த்தைகளிலும் நிச்சயம் எந்த முன்னேற்றமும் காணப்போவதில்லை.
  3. முற்றுகை தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்காது.
  4. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, ‘குறிப்பிட்ட வழித்தடத்தில்‘ ஈரானிய அங்கீகாரத்துடனே பயணம் மேற்கொள்ளப்படும்.
  5.  ஜலசந்தி திறந்திருக்கிறதா அல்லது மூடப்பட்டிருக்கிறதா என்பதும், அதனை நிர்வகிக்கும் விதிமுறைகளும் களத்தில் தான் தீர்மானிக்கப்படும், சமூக ஊடகங்களால் அல்ல.
  6. ஊடகப் போர் மற்றும் பொதுக் கருத்தை வடிவமைப்பது ஆகியவை போரின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், இந்த தந்திரங்களால் ஈரானிய தேசம் பாதிக்கப்படாது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் சமீபத்திய நேர்காணலில் பேச்சுவார்த்தைகள் குறித்த உண்மையான மற்றும் துல்லியமான செய்திகளை படியுங்கள்.

இதற்கு முன்னதாக மற்றொரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று இரவும் நான் கூறியது போலவே, இந்த போர் நிறுத்தம் ஹெஸ்புல்லாவின் உறுதியினாலும், எதிர்ப்புக் கூட்டணியின் ஒற்றுமையினாலும் ஏற்பட்ட விளைவே ஆகும்; இந்த போர் நிறுத்தத்தை நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வோம். மேலும், முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் ஒன்றாகவே இருப்போம். இந்த போர் நிறுத்தத்தை அங்கீகரித்த பாகிஸ்தான் அரசின் மத்தியஸ்த முயற்சிகளுக்கும், ஜெனரல் ஆசிம் முனீருக்கும் நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் எங்கள் வாக்குறுதிக்கு உண்மையாக இருக்கிறோம்...“ என்று காலிபாஃப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் கூறியது என்ன.?

அதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அணு குப்பைகளை தங்களிடம் தர ஈரான் ஒப்புக்கொண்டதாகவும், தாங்கள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கு நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அப்படி ஒப்பந்தம் ஏற்பட்டால், எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும், அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், இவை அனைத்தும் பொய் என்று ஈரான் நெத்தியில் அடித்தார் போல் கூறியுள்ளது. இதற்கு ட்ரம்ப் என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.